அரசியல் வெற்றிடம்: ம.நடராஜன் குசும்பு!

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாக சிலர் கூறி வருகிறார்கள். குறிப்பாக பாஜகவினர்தான் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டு விட்டதாகக் கூறி அதிமுகவுக்கு உதவப் போகிறோம் என்று சொல்லி அதிமுகவையே கைப்பற்றி விட்டார்கள். இப்போதை இரட்டை இலையை இழந்த அதிமுக அதை எப்படி மீட்பது என்று தெரியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக தலைவர் கருணாநிதி முதுமையால் ஓய்வில் இருப்பதால் திமுகவும் முடங்கிக் கிடப்பது போன்ற தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் முழு வீச்சில் அரசியல் பணிகளை செய்து வருகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ம. நடராஜன் “நேருவுக்குப் பிறகு பெரிய வெற்றிடம் ஏற்படும் என்றார்கள். அந்த இடத்தை லால்பகதூர் சாஸ்திரி நிரப்பினார். இந்திராவுக்குப் பிறகு தலைவர்களே இல்லை என்றார்கள். ஆனால் ராஜீவ் காந்தி வந்தார். தமிழகத்தில் காமராஜருக்குப் பிறகு அண்ணா அதன் பின் எம்.ஜி.ஆர் என உருவாகி வந்தார்கள். புதிய தலைவர்கள் பிறப்பதில்லை ஏற்கனவே இருக்கிறார்கள்.அது மக்களுக்கு தெரியும்” என்றார்.
நடராஜன் சொன்ன பட்டியலில் திமுக தலைவர் கருணாநிதி பெயர் இல்லை. உண்மையில் எம்.ஜி.ஆர் காமராஜரை விட இக்கட்டான ஒரு தருணத்தின் சாதாரண பேச்சாளராக திமுக தலைமைக்கு வந்த கருணாநிதி திமுகவை மிகப்பெரிய வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். எம்.ஜி.ஆருக்கு இருந்த கவர்ச்சி அரசியல் எதுவும் இல்லாமல் தன் மேடைப்பேச்சால் அதை சாதித்த மாபெரும் மக்கள் தலைவர் கருணாநிதி. ஆனால் அந்த கருணாநிதியின் பெயரை தவிர்த்திருப்பதுதான் நடராஜனின் குசும்பு!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*