கூவத்தூர் கூண்டுக் கிளிகள்: ஸ்டாலின் கண்டனம்!

Mk Stalin Deputy Chief Minister of Tamil Nadu from 2009 to 2011

குஜராத் காங்கிரஸ் எம்.எல். ஏக்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கும் பாஜகவிடம் இருந்து தங்கள் எம்.எல்.ஏக்களை காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் கட்சி 44 சட்டமன்ற உறுப்பினர்களை பெங்களூர் விடுதியில் தங்க வைத்துள்ளது. அந்த பொருப்பை ஏற்றிருக்கும் கர்நாடக அமைச்சர் வீட்டிலும், எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்பட்ட நிலையில் அது நாடு முழுக்க கடும் அதிர்ச்சியை உருவாக்கியது. தனது அரசியல் ஆதாயத்திற்காக வருமானவரித்துறையை பாஜக பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற அவையை முடக்கிய நிலையில் திமுக செயல் தலைவரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ளார். அதில்,
‘குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தங்கியுள்ள இடங்களில் ரெய்டு நடத்தும் வருமான வரித்துறை கூவத்தூரில் குதிரை பேரம் நடந்தபோது வேடிக்கை பார்த்தது ஏன். சுதந்திரமான வருமான வரித்துறையை, கூவத்தூர் பக்கமே எட்டிப்பார்க்க விடாமல் ‘கூண்டுக் கிளி’ போல் மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசு அடைத்து வைத்ததா. புதுச்சேரியில் முதல்வருக்காக பதவி விலகிய எம்.எல்.ஏ வீட்டில் ரெய்டு செய்த வருமான வரித்துறை ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் மீது ஏன் சந்தேகத்தை எழுப்பவில்லை. வருமான வரித்துறை, சி.பி.ஐ போன்ற அமைப்புகளை பா.ஜ.க-வின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகப் பயன்படுத்துவதை பிரதமர் தடுத்து நிறுத்த முன்வர வேண்டும்’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*