யூரேனியத்துக்காக பிடுங்கி எறியப்படும் பழங்குடிகள்!

நாட்டின் மின்னாற்றல் சார்ந்த தேவை அதிகரித்து வரும் சூழலில் அணுக்கதிர் ஆற்றலுக்காக அரசாங்கம் சூழலியல் குறித்த விழிப்புணர்வின்றி கனிமங்களை எடுக்க காடுகளையும் நிலங்களையும் ஆராய்ச்சி நிலையங்களாக மாற்றும் சூழல் அதிகரித்துள்ளது.

சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் இதற்கான ஆய்வுப்பணிகளுக்காக அரசாங்கம் அனுமதியளித்தபோது அம்ராபட் புலிகள் வனச்சரகத்தைச் சார்ந்த செஞ்சு பழங்குடியினர் கடந்த மே மாதம் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த முற்பட்டனர். மேலும் அணு ஆய்வு சார்ந்த பணிகள் மிகவும் ஆபத்து நிறைந்தவை. இது காடுகளைக் குறிவைத்து நிகழ்த்தப் பெறுவதால் பெருமளவில் காடுகள் அழிக்கப்படும் அபாயம் உள்ளது.

நம் நாட்டில் 22 அணுசக்தியுலைகள் இயங்குகின்றன. இவற்றின் மூலம் ஆண்டுக்கு மொத்த ஆற்றலில் 3% அணுமின் ஆற்றல் கிடைக்கின்றது. இதை 2050ஆம் ஆண்டுக்குள் 25% வளர்ச்சி வீதமாக உயர்த்த யுரேனியத் தேவைக்காக நாட்டின் பல இடங்கள் புவியியல் மற்றும் கனிமவியல் ஆய்வாளர்களால் கண்டறியப்படும் களப்பணி நடந்துவருகின்றது.

இப்போது மத்தியப் பிரதேசத்தில் உள்ள பேதுல் மாவட்டத்தில் கொச்சமா பழங்குடியின கிராமத்தில் இதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருகின்றன. திடீரென்று பறக்கும் ஹெலிக்காப்டர்கள், ஹெலிப்பேடில் இறங்கும் மின்காந்தத் தன்மையுடைய இயந்திரங்கள், புதிதாக சுற்றும் மிடுக்கான மனிதர்கள் என பழங்குடியின கிராமம் பரபரப்புக்குள்ளாகியிருக்கின்றது. விசாரித்தபோது அங்கிருக்கும் ஷ்ரமிக் பழங்குடியின நலச்சங்கம் யுரேனிய ஆய்வு நிகழ்த்தப்பெற இருப்பதை அறிவித்தபின்னரே அணு ஆய்விற்காக இத்தனை களேபரங்கள் என்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதியில் வசிக்கும் மாலதி கோர்க்கு கூறுகையில் “இது முதன்முறை கிடையாது; ஏற்கெனவே நாட்டின் மிகப்பெரிய சுடுதளம் அமைப்பதற்கு 1971இல் சுமார் 1000 குடும்பங்களை இங்கிருந்து வெளியேற்றினர். இப்பகுதியிலிருந்து சுமார் 20 கிமீ தொலைவில் உள்ள கெஸ்லா கிராமத்தில் ஐந்து ஹெக்டேர் நிலத்துடன் வாழ்ந்து இப்போது வீடற்றவர்களாக இங்கு இருக்கின்றோம்” என தெரிவித்தார்.

மேலும் இங்கு நிலங்களை அனுமதியின்றி கையகப்படுத்தி துளையிடும் பணி நடக்கின்றது. இதில் விளைநிலங்கள், காடுகள், வாழிடங்கள் முதலியவை அடக்கம். முறையான தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படாமல் ரகசிய ஆய்வுகள் நிகழ்த்துவதால் இப்பகுதிக்குள் வெளியாட்கள் நுழையவோ புகைப்படமெடுக்கவோ அனுமதியில்லை.

இதுகுறித்து எழுத்து ரீதியான புகாரை மாவட்ட ஆட்சியரிடம் சமர்பித்தபோதும் தெளிவான விளக்கங்கள் ஏதும் தரப்படவில்லை. மாவட்ட ஆட்சியர் ஷஷாங் மிஸ்ரா ஊடகங்களிடம் “இதுகுறித்து கவனிக்கின்றேன்; அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் ஏதும் வரவில்லை” என சம்பிரதாயமான பதில்களைக் கூறிவருகிறார்.

மேலும் புவியியல் மற்றும் கனிமவள இயக்குனர் வினித் ஆஸ்டின் இதுகுறித்து மறுத்துள்ளார். அவர், கனிமங்களுக்கான மண் பரிசோதனை மற்றும் மாதிரிகளை சேகரிக்கும் பணி மட்டுமே நிகழ்ந்துள்ளது. மத்திய அரசின் கனிமவளம் சார்ந்த ஆய்வுகளுக்கு மாநில அரசையோ உள்ளாட்சி அமைப்புகளிடமோ அனுமதி கேட்டிட அவசியமில்லை என்று கூறியிருக்கின்றார். மேலும் கனிமங்கள் இருப்பது உறுதியான பின் மட்டுமே ஆய்வகம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூழலியல் சமூக ஆய்வாளர் சேவியர் தயாஸ் கனிமவளச் சுரண்டல் காடுகளையும் பழங்குடியினரையும் குறிவைத்து நிகழ்த்தப்படுகின்றது. அவர்களுக்கு கண்துடைப்பிற்கு நிவாரணம் வழங்கி அரசு அவர்களது வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்குகின்றது என்று தமது ஆதங்கத்தைச் சொல்லி வருந்தியுள்ளார்.

அணுக்கதிர் தனிமங்களை உரிய பாதுகாப்புடன் இயற்கைச் சமநிலையைக் கெடுக்காமல் கையாள்வதற்கு நாம் இன்னும் கற்றுக்கொள்ளவில்லை என்கிற நிலையில் பாதுகாப்பான ஆற்றல்களில் மின்உற்பத்தி செய்வதற்கான வழிமுறைகளை அரசு நடைமுறைப்படுத்திடல் வேண்டும்.

நன்றி: www.downtoearth.org

தமிழாக்கம்: வெண்பா கீதாயன்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*