ஆஸ்திரேலிய விசாக்களை கையாளும் பணியில் தனியார் நிறுவனங்கள்

ஆஸ்திரேலிய விசா விசயங்களைக் கையாளும் பணியில் குடிவரவுத் திணைக்களத்துடன் தனியார் நிறுவனங்களும் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக பெங்களுர், சிங்கப்பூர் மற்றும் சான் பிரான்ஸிஸ்கோ ஆகிய இடங்களிலுள்ள முக்கிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதுவரையில் ஆஸ்திரேலிய விசா விவகாரங்கள் அனைத்தும் குடிவரவுத் திணைக்களத்தினால் கையாளப்பட்டுவந்த நிலையில், தற்போது அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதனால், இப்பணியில் தனியார் நிறுவனங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.குறிப்பாக விசா மோசடிகளைக் கண்டுபிடித்தல், பரிசோதனைகளை நிர்வகித்தல் மற்றும் விசாவை வழங்கலாமா இல்லையா என்பது தொடர்பில் பரிந்துரைத்தல் போன்ற பணிகளை, தனியார்வசம் ஒப்படைக்கும் வகையில் மாற்றங்களைக் கொண்டுவர குடிவரவுத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

எனினும் பாதுகாப்பு மதிப்பீடுகள், புலனாய்வுப் பணிகள் மற்றும் அமலாக்கல் அதிகாரம் போன்றவை தொடர்ந்தும் குடிவரவுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். இதற்கென அடுத்த 10 ஆண்டுகளில் 9 பில்லியன் டாலர்கள் பெறுமதியான ஒப்பந்தங்கள் தனியார் நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தில் 570 பணியிடங்கள் இல்லாமல் செய்யப்படுகின்ற வேளையில், இவ்வருடத்திற்கான நிதி ஒதுக்கீடும் 165 மில்லியன் டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே விசா நடைமுறைகளின் பெரும்பகுதி தனியார் வசம் ஒப்படைக்கப்படுவதால், பெருந்தொகை பணத்தை சேமிக்க முடியுமென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*