வளர்மதி மீது குண்டாஸ் ஏன்? கமிஷனருக்கு நோட்டீஸ்!

மாணவி வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது ஏன் என்பது குறித்து சேலம் கமிஷனர் பதிலளிக்க வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கதிராமங்கலம் மற்றும் நெடுவாசலுக்கு ஆதரவாக சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி இயற்கையை காப்போம் என்று துண்டு பிரசுரங்களை விநியோகித்தார். ஆனால் அவர் நக்சலைட்டுகளுக்கு ஆள் சேர்ப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் ஒரு மாணவி என்றும் பாராமல் அவரது எதிர்காலத்தை பற்றி சிறிதும் யோசிக்காமல் அவர் மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டது. இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது அதனால்தான் கைது செய்யப்பட்டார் என்றும், மக்கள் மத்தியில் கிளர்ச்சி ஏற்படுத்தினால் அவர்கள் மீது குண்டாஸ் சட்டம் பாயுமென்றும் தெரிவித்தார். மேலும் மாணவி வளர்மதி பெரியார் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கமும் செய்யப்பட்டார். வளர்மதி மீது குண்டாஸ் சட்டம் போடப்பட்டதற்கும், அவர் பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதற்கும் தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்நிலையில், வளர்மதி மீதான குண்டர் சட்டத்தினை ரத்து செய்யக் கோரி, அவரது தந்தை மாதையன் சென்னை உயர்நீதி மன்றத்தில் நேற்று  மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு தனது மகள் வளர்மதி உரிய அனுமதி பெற்றுத்தான் போராடியதாக தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காக தனது மகள் பழி வாங்கப்படுவதாகவும், எனவே வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும்  மாதையன் வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கலையரசன் தலைமையிலான அமர்வு, இது குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி சேலம் போலீஸ் கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*