அதிமுக பொதுச்செயலாளர் யார்: ஆர்.டி.ஐ பதில்!

அதிமுகவின் பொது செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழக முதலமைச்சராகவும், அதிமுகவின் பொது செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த வருடம் டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, அதிமுக சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக பிரிந்தது. ஆனால் தற்போது அதிமுக மூன்று அணிகளாக பிரிந்திருக்கிறது. முன்னதாக அதிமுகவின் பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்றதைத் தொடர்ந்து டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக அறிவித்துவிட்டு சென்றார். இதனையடுத்து பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி, இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்தது.

இந்நிலையில், சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், தேர்தல் ஆணையத்திடம் அதிமுகவின் பொது செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், அதிமுகவில் பொது செயலாளர் யார் என்பது பற்றி இதுவரை முடிவெடுக்கவில்லை  அதிமுகவில் உட்கட்சி பிரச்சனை உள்ளதால், அதிமுக பொது செயலாளர் பற்றி இதுவரை தீர்மானிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*