ஆஸ்திரேலியாவில் அகதிகள் பாதிக்கப்படும் நிலை- ஐ.நா

ஆஸ்திரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான சட்டமுன்வடிவில், மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென ஐ.நா சபை ஊக்குவித்துள்ளது.

ஆஸ்திரேலிய அரசு முன்மொழிந்துள்ள மாற்றங்கள், அகதிகளுக்கு பாதகமாக அமையும் அதேநேரம், சர்வதேச விதிமுறைகளை மீறும் வகையில் அமையக்கூடுமென ஐ.நா வின் அகதிகளுக்கான அமைப்பான UNHCR சுட்டிக்காட்டியுள்ளது.

குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செனட் குழுவிடம், 500 தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கின்ற நிலையில், UNHCR-இன் ஆணையாளரும் இதில் அடங்குகிறார்.

PR எனப்படும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றபின்னர், ஒரு ஆண்டு ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தால், அவர்கள் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற தகுதி பெறுவர் எனும் தற்போதைய நிபந்தனையை மாற்றி, ஒருவர் வதிவிட உரிமையுடன் 4 ஆண்டுகள் வாழ்ந்திருந்தால் மட்டுமே குடியுரிமை பெற முடியும் என்பதுடன், ஆங்கிலப்புலமையை நிரூபித்தல், பிற சமூகத்தோடு இணைந்து வாழப் பழகியிருத்தல், ஆஸ்திரேலிய விழுமியங்களை ஏற்றல் போன்ற பல புதிய நிபந்தனைகள் தற்போது அரசு முன்வைக்கும் குடியுரிமைச் சட்ட முன்வடிவில் இடம் பெற்றுள்ளன.

இந்தப்பின்னணியில் ஆங்கிலப்புலமையை நிரூபிப்பதற்கு விதிக்கப்பட்டுள்ள உயர் வரையறை, நீண்ட கால காத்திருப்பு, குற்றவியல் பதிவுகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்பு போன்ற பல காரணிகளால், அகதிகளுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதில் சிக்கல்கள் ஏற்படுமென UNHCR தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய பலரது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டியுள்ள நிலையில், அவர்கள் ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற வேண்டுமெனில் சுமார் 15 வருடங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம் எனத் தெரிவித்துள்ள UNHCR, இதைத் தவிர்ப்பதற்கு குடியுரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்படும் சில மாற்றங்களிலிருந்து அகதிகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என பரிந்துரைத்துள்ளது.

இதேவேளை ஆஸ்திரேலிய குடியுரிமைச் சட்டத்தை மாற்றியமைப்பதற்கான அரசின் சட்டமுன்வடிவினை ஆராயும் செயற்குழு தனது அறிக்கையை செப்டம்பர் 4ம் தேதியளிவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*