தினகரன் சுற்றுப்பயணம் பீதியில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, தற்போது தினகரனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அமைச்சர்கள் கடுமையாக எதிர்த்து வருவதால், மூன்றாக உடைந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் வலுவான ஒரு அணி உருவாகி தன்னை முழுதாக எதிர்ப்பார்கள் என்று எதிர்பார்க்காத தினகரன் தனது பக்கம் 30-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை இழுத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓபிஎஸ் அணியும் இணைய வேண்டும் என்றும் அதற்கு 60 நாட்கள் கெடு விதிப்பதாகவும் தெரிவித்தார். மேலும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தீவிர கட்சிப்பணியில் ஈடுபடப் போவதாகவும், கட்சி அலுவலகத்துக்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால் டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்தால் அவரை கைது செய்ய எடப்பாடி பழனிசாமி அணியினர் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து டி.டி.வி. தினகரன் தனது திட்டத்தை மாற்றி அமைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில், டிடிவி தினகரன் விதித்த கெடு இன்றுடன் முடிவடைந்ததையடுத்து அவரது அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கப்போகிறதென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்திருந்தது. இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. டிடிவி தினகரன், ஆகஸ்ட் 14-ஆம் தேதி மேலூரிலிருந்து தனது சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார். ஆகஸ்ட் 23-ல் வடசென்னையிலும், ஆக-29 ஆம் தேதி தேனி, செப்டம்பர்-5 கரூர், செப்-12 தஞ்சாவூர், செப்-23 நெல்லை, செப்-26 தருமபுரி, செப்-30 திருச்சி, அக்டோபர்-5 சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். தனது சுற்றுப்பயணத்தில் மாவட்ட ரீதியாக நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவினையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் பேசவிருக்கிறார். அது மட்டுமின்றி தொண்டர்களை சந்தித்தும் அவர் பேசவிருக்கிறார்.

கெடு முடிவடைந்ததும் அவர் கட்சி அலுவலகம் செல்லப்போவதில்லை என்றும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகவும் ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. மேலும், கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதைவிட தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து அவர்களிடம் தனக்கு இருக்கும் ஆதரவை தெரிந்துகொண்டும், மேற்கொண்டு தொண்டர்களிடம் தனது ஆதரவை பெருக்கிக் கொண்டும் கட்சி அலுவலகத்தை கைப்பற்றுவதே சரியாக இருக்குமென்றும் அப்போதுதான் எடப்பாடி பழனிசாமியிடமிருந்து வரும் நெருக்கடியை முழுவதுமாக எதிர்க்கலாமென்றும் தினகரன் திட்டமிட்டிருக்கிறார் அதனால்தான் இந்த சுற்றுப்பயணம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த சுற்றுப்பயணத்துக்கு பின்பு அதிமுக கட்சிக்கு டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யலாம் என்ற தகவல்களும் வெளியாகின்றன. சமீபத்தில் தினகரனின் ஆதரவாளர்கள் மன்னார்குடியில் கூட்டியிருந்த கூட்டத்தையே விரும்பாத

முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறையினரை வைத்து அந்த கூட்டத்தினை கலைக்க செய்தார். அதனால் இந்த முறை தினகரன் பேசவிருக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் முதல்வர் பழனிசாமி மூலம் நெருக்கடி அளிக்கப்படுமென்றும் அதனை எவ்வாறு சமாளிக்க வேண்டுமென்ற முன்னெச்சரிக்கையுடனே டிடிவி தினகரன் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கவிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கெடு முடிந்ததும், டிடிவி தினகரன் நேராக கட்சி அலுவலகத்துக்கு வருவார், அதனை காரணமாக வைத்து டிடிவி தினகரனை கைது செய்யலாம் என்று எண்ணியிருந்த எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது அணியினருக்கும்,  டிடிவி தினகரனின் சுற்றுப்பயண அறிவிப்பு ஒருவித பீதியை கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களும், அதிமுகவின் உண்மை தொண்டர்களும் ஜெயலலிதா வளர்த்த இந்த

 

கட்டுக்கோப்பான கட்சியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் சேர்ந்து டெல்லியிடம் மொத்தமாக அடகு வைத்திருப்பதையும், அதிமுக என்ற கட்சிக்குள் பாஜகவின் தலையீடு இருப்பதையும் சுத்தமாக விரும்பவில்லை. எனவே டிடிவி தினகரனின் இந்த சுற்றுப்பயணம் அவருக்கு தொண்டர்களிடம் ஆதரவினை பெருக்கி அவருக்கு நிச்சயம் வெற்றியையே தேடி தருமென்று அரசியல் விமர்சர்களால் கருதப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*