நீட் அநீதி: அனுமதியும் கொடுப்பாராம் எதிர்த்தும் போராடுவாராம்!

தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, பரவி வரும் டெங்கு, நீட் தேர்வு போன்றவற்றைக் கண்டித்து சென்னையில் வரும் 10-ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மத்தியில் ஆளும் பாஜக அரசு தமிழக நலனுக்கு எதிராக செயல்படுத்தவிருந்த திட்டங்களை கடுமையாக எதிர்த்தார். ஆனால் அவர் உடல்நலக் குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல்வராக பொறுப்பு வகித்த ஓ.பன்னீர் செல்வத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பாஜக உதய் மின் திட்டம், நீட் தேர்வு போன்ற திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த துவங்கியது. ஓ.பன்னீர் செல்வமும் தனது பதவிக்காக பாஜகவிடம் விசுவாசமாக இருந்ததால் அதற்கு அனுமதி வழங்கினார். அதன்பிறகு அதிமுகவின் உட்கட்சி பூசலால் நடந்த அரசியல் மாற்றங்களினால் முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் விலகி எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார். இவரும் பாஜகவின் தீவிர விசுவாசியாக மாறியதால் பாஜக நீட் தேர்வை தமிழகத்தில் நடத்தி காட்டிவிட்டது. நீட்டுக்கு விலக்கு வேண்டும் விலக்கு வேண்டும் என்று அமைச்சர்களும், முதல்வரும் டெல்லிக்கு சென்று வந்தாலும் இதுவரை ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அதன் வெளிப்பாடுதான் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நீட் தேர்வில் நிரந்தர தீர்வு கிடைக்காது என்று மிகவும் தைரியமாக தொடர்ந்து கூறி வருகிறார். இதனால் பாஜகவிடம் அடிபணிந்து கிடக்கும் தற்போதைய அரசால் நிச்சயம் தமிழகத்துக்கு நீட்டிலிருந்து விலக்கு கிடைக்காது என்பதே பலரின் கருத்தாக இருக்கிறது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதுடன், டெங்கு  காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இதே போல நீட் விவகாரத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்படவில்லை என ஓபிஎஸ் அணியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனிடையே நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தமிழக அரசு என்றாலே ஊழல் அரசு என மக்கள் கருதுகிறார்கள் என குற்றம் சாட்டினார். இதனையடுத்து முதன்முறையாக ஓபிஎஸ் அணியினர் தமிழக அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருக்கின்றனர். அதன்படி தமிழகம் முழுவதும் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தியும், பரவி வரும் டெங்குவை கட்டுப்படுத்தக் கோரியும், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் சென்னையில் வரும் 10-ஆம் தேதி பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இனி தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் தொடரும் எனவும்  பன்னீர் செல்வம் அணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்து நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கியபோது பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜன்  நீட் தேர்வு குறித்து கூறுகையில், நான் அமைச்சராக இருந்தபோது நீட் தேர்வு விவகாரத்தில் எனது கரங்கள் கட்டப்பட்டிருந்தன என்று கூறியிருந்தார். அப்போது மாஃபா பாண்டியராஜனின் கரங்கள் யாரால் கட்டப்பட்டிருந்தன என்பது அவருக்கே வெளிச்சம். நீட் தேர்வுக்கு அனுமதி வழங்கிய முன்னாள் முதல்வரும், அப்போது அமைதியாக இருந்த முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சரும் தற்போது நீட் தேர்வை எதிர்த்து போராட்டம் அறிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*