பிக் பாஸ்- மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கேலிப்பொருளா?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி மனநலம் பாதித்தவர்கள் போல் நடிக்க சொல்லி போட்டியாளர்களுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. இது மனநலம் பாதித்தவர்களை கேலிப்பொருளாக சித்தரிக்கும் ஆபாசமான செயல் என உளவியல் மருத்துவர்கள் #Rk_Rudhran மற்றும் #Sivabalan_Elangovan ஆகியோர் இந்த செயலை கண்டித்து எழுதியுள்ளனர். ரியாலிட்டி ஷோவில் நடிப்பதற்கு எத்தனையோ வேடங்கள் இருக்கும்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கேலிப்பொருளாக்கும் இழிசெயலை செய்திருக்கிறது எண்டெமோல் நிறுவனம். இதுகுறித்த உளவியல் மருத்துவர்கள் கருத்தை கீழே காண்போம்

#Sivabalan_Elangovan

 

 

 

 

 

 

 

மன நோயாளிகள் மீது, இந்த சமூகம் ஏற்படுத்தியிருக்கும் பிம்பம் நிச்சயம் வன்மமானது. தங்கள் மனதில் இருக்கும் குரூரத்தையும், பரிகாசத்தையும், கேலியையும் எந்த வித குறைந்தபட்ச குற்ற உணர்ச்சியும் இன்றி அவர்கள் மீது இந்த சமூகம் திணித்து கொண்டிருக்கின்றது. பொது தளத்தில் மனநலம் குறித்தும், அதன் நோய்கள் குறித்தும் ஏராளமான உரையாடல்கள் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன நோயாளிகள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுபுத்தி எத்தனை தவறானது என்பதை உணர்த்த ஏராளமான தன்னார்வலர்கள் நீண்ட காலமாக முயற்சித்து வருகிறார்கள். ஆனால் இது போன்ற பொறுப்பற்ற ஊடகங்கள் (சினிமா, சீரியல்களையும் சேர்த்து) இந்த முயற்சியை திரும்பவும் தொடங்கிய இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றன.

அன்புள்ள பிக் பாஸ்,

பச்சை உடை அணியாமல், நீங்களும், உங்கள் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களும் இத்தனை நாள் நடத்திய கூத்து தான் உங்கள் அனைவரின் மனப்பிறழ்வுக்கான அறிகுறி. பச்சை உடை அணிந்து நீங்கள் நேற்று செய்தது அனைத்தும் ஒரு ஆபாச நடனத்தின் அருவருப்பான உடலசைவுகள் மட்டுமே.

#Rk_Rudhran

 

 

 

 

மனநலம் குன்றியவர் குறித்து பல மூட கருத்துகள் பலர் மத்தியில் இருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அது குறித்த விகார விமர்சனமும் வேடிக்கை எனும் பெயரால் காலங்காலமாய் இந்நோய் பற்றிய மட்டமான மடத்தனமான சித்தரிப்பும் நேற்று ஒளிபரப்பப்பட்டது.எது குறித்தும் ஆழமான புரிதல் இல்லாத ஊடக ஆவேசத்தின் அவசர ஆட்டமாய் இதை ஒதுக்கிச் செல்ல முடியவில்லை.

பிறமுட்டாள்கள் இன்னமும் நவராத்திரி பட மனநோளிகளின் அபத்த நகைச்சுவையே பிரதான சித்தரிப்பாய் நினைத்துக் கொண்டிருந்தாலும் அந்த கூட்ட்த்தில் இருக்கும் ஒரு செவிலியருக்கும் மனநோயால் பாதிக்கப்பட்டவர் எப்படி இருப்பார் நடந்து கொள்வார் என்பது தெரியவில்லை என்பது தான் கேவலம். சமூகத்தில் இப்படித்தான் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள், இதில் மருத்துவர்களும் அடக்கம்.

1986 முதல் 2001 வரை என் எல்லா செயல்பாட்டிலும் மனநலம்+மனநோய் விழிப்புணர்வுக்காக உழைத்தவன் என்பதில் எனக்கு ஒரு தற்பெருமை உண்டு, அத்தனையும் போதவில்லை என வருத்தமும் கோபமும் நேற்று என்னுள் பொங்கியது.ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் மூடநம்பிக்கைகள் பரவலாக பரவுகின்றன. மனநோய்கள் குறித்து மக்களிடையே மீண்டும் ஒரு தீவிர விழிப்புணர்வு உருவாக்கும் பணி பொறுப்பானவர்களுக்கு அவசியமாகிறது.
வியாபார நிமித்தம் கமல் இதை விமர்சிக்காமல் விட்டாலும் இது குறித்து வேறேதாவது தளத்திலாவது பேசுவது இந்நிகழ்ச்சியில் சம்பாதிப்பதற்கான பிராயச்சித்தமாகும். இதெல்லாம் அதீத எதிர்பார்ப்பு என்பதும் தெரியும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*