தினகரனைச் சந்தித்த காங்கிரஸ் விஜயதாரிணி!

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி சந்தித்து பேசினார்.

டிடிவி தினகரன் நேற்று அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமனம் செய்தார். மேலும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் திட்டமிட்டிருக்கிறார். தினகரனின் இந்த அதிரடி அறிவிப்பால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி டிடிவி தினகரனை இன்று திடீரென தினகரனின் பெசன்ட் நகர் இல்லத்தில் சந்தித்து பேசினார். அதிமுகவுக்குள் நிகழ்ந்து வரும் குழப்பமான சூழ்நிலைகளுக்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ டிடிவி தினகரனை சந்தித்து பேசியது அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினகரனுடனான சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயதாரணி, தினகரனின் மாமியார் சந்தானலட்சுமியின் மறைவு குறித்து, அரசியல் பாரபட்சமின்றி துக்கம் விசாரிக்க அவரை சந்தித்தேன். மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக, அதிமுகவின் செயல்பாட்டை தீர்மானித்து, நடைமுறைபடுத்தி வருகிறது. இன்று அதிமுகவை நசுக்கி வேடிக்கை பார்க்கும் பாஜக, நாளை திமுகவையும் இதேபோல் செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை. தமிழகத்தில் திராவிட கட்சிகளை அழிப்பதற்கு பாஜக திட்டம் தீட்டிக்கொண்டு, அதை செயல்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளது. தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைத்தால் அது அந்த கட்சிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தமிழக மக்கள் பாஜகவின் நிழலைக் கூட விரும்பமாட்டார்கள். பாஜகவை எதிர்க்க அனைத்து கட்சிகளும் ஒன்று சேர வேண்டும். தமிழகத்தில் மத பிரவேசத்தை பாஜக துவங்க நினைக்கிறது. அதற்கு, எக்காரணம் கொண்டும் இடம் தரக்கூடாது என்று பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*