பொறுமைக்கும் எல்லையுண்டு : டிடிவி தினகரன்

அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்காக டிடிவி தினகரன் விதித்த 60 நாட்கள் கெடு நிறைவடைந்ததையடுத்து. அவர் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தில் மாவட்ட ரீதியாக நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மேலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி நடைபெறும் பொதுக் கூட்டங்களிலும் பேசவிருக்கிறார். கெடு முடிந்ததும் டிடிவி தினகரன் கட்சி அலுவலகத்துக்கு வருவார் அவரை கைது செய்யலாம் என்று நினைத்திருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தினகரனின் சுற்றுப்பயண அறிவிப்பு அதிர்ச்சியளித்திருப்பதாக கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் அதிர்ச்சி அளித்த சில மணி நேரங்களிலேயே டிடிவி தினகரன் அடுத்த அதிர்ச்சியை அளிக்கும் விதமாக அதிமுகவின் புதிய நிர்வாகிகள் பட்டியலை நேற்று அறிவித்தார் 64 பேர் கொண்ட புதிய நிர்வாகிகள் பட்டியலில் கொள்கை பரப்பு துணை செயலாளராக நாஞ்சில் சம்பத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.   தேர்தல் பிரிவு செயலாளராக தங்கதுரை நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுக அமைப்பு செயலாளர்களாக பழனியப்பன், செந்தில் பாலாஜி, தோப்பு வெங்கடாசலம், ஜக்கையன், மேலூர் சாமி, சண்முகவேலு, கு.ப.கிருஷ்ணன், மாதவரம் மூர்த்தி  உள்ளிட்ட 64 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் பேசுகையில், 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்பதே நோக்கம். இதன் காரணமாகவே கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறது. தேவைப்படும் பொழுது எப்போது வேண்டுமானாலும் அதிமுக தலைமை கழகத்திற்கு செல்வேன். பொறுப்பான பதவிகளில் உள்ளவர்களை நீக்கி நான் பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ள மாட்டேன். ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு. ஜெயக்குமாரை மீனவர் பிரிவு செயலாளராக நியமித்தவரே சசிகலாதான். நடவடிக்கை எடுக்க ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் அதைச் செய்ய சசிகலாவும் விரும்பவில்லை, நானும் விரும்பவில்லை. வரும் நாடாளுமன்றத்தில் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவோம் என்றார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*