எடப்பாடி பழனிசாமியால் நிறுத்தப்பட்ட ஆம்புலன்ஸ்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வருகையால் நிறுத்தப்பட்ட போக்குவரத்தில் ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக்கொண்டது. ஆனால் காவல்துறையினர் ஆம்புலன்ஸ் செல்வதற்கு அனுமதியளிக்கவில்லை.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது விவிஐபி கலாச்சாரம் தழைத்தோங்கி இருந்தது. அவரது வாகனம் வருகிறதென்றால் சாலையில் செல்லும் சகல வாகனங்களும் சர்வ சாதாரணமாக காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்படும். அதனாலயே ஜெயலலிதா மேல் அதிருப்தியடைந்தவர்களும் உண்டு. அவரது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் விவிஐபி கலாச்சாரம் சற்று குறைவாக இருந்தது. ஆனால் தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி மூலம் அக்கலாச்சாரம் மீண்டும் பிறக்க ஆரம்பித்துள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்திலிருந்து இன்று தலைமை செயலகத்துக்கு சென்றார். அப்போது போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை நிறுத்தி அவரது வாகனத்துக்கும் அவரது பாதுகாப்பு வாகனங்களுக்கும் வழியை ஏற்படுத்தி கொடுத்தனர். இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் ஒரு ஆம்புலன்ஸ் ஒன்றும் சிக்கிக் கொண்டது. ஆம்புலன்ஸ் வாகனம் பல முறை ஒலி எழுப்பியும் காவல்துறையினர் அந்த வாகனத்துக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கவில்லை. மேலும் அருகிலிருந்தவர்கள் காவல்துறையினரிடம் ஆம்புலன்ஸ் செல்ல அனுமதியளிக்குமாறு கோரியும் அதனை காவல்துறையினர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்தனர். இதனைத் தொடர்ந்து அங்கிருந்த வாகன ஓட்டிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசரமாக சென்று ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பதற்காக நாங்கள் ஏன் காத்திருக்க வேண்டுமென்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கடந்த மே 4-ஆம் தேதி பெங்களூருவில் உள்ள டவுன்ஹால் பகுதியில் முதல்வர் சித்தராமையா கார் வந்தபோது,  ஆம்புலன்ஸூக்காக முதல்வர் சித்தராமையாவின் வாகனம் நிறுத்தப்பட்டு வழி ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. ஆனால் தமிழகத்திலோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. ஆம்புலன்ஸில் ஒரு உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறதென்பதை கூட யோசிக்காமல் அதிகாரத்திலிருப்பவர்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்த போது அவரது வருகையால் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மக்கள் கடும் அவதுக்குள்ளானாலும் இதுபோன்று ஒரு ஆம்புலன்ஸ் தடுத்து நிறுத்தப்பட்டதில்லை. ஆனால் தொடர்ந்து தனது அதிகார பலத்தால் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து மக்கள் மத்தியில் அதிருப்தியையே சந்தித்து வருகிறார். குறிப்பாக இந்த விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு  மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*