கதிராமங்கலம் போராட்டம் : ஜெயராமன் தவிர 9 பேருக்கு ஜாமீன்!

கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராடி கைதான 10 பேரில் பேராசிரியர் ஜெயராமன் தவிர 9 பேருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது நீதிமன்றம்.

கதிராமங்கலம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வந்ததற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 30-ஆம் தேதி குழாயில் வெடிப்பு ஏற்பட்டு திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இதனைக் கண்டித்தும் ஒஎன்ஜிசி முற்றிலுமாக கிராமத்தில் இருந்து வெளியேறக் கோரியும் கதிராமங்கலம் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆனால் காவல்துறையினர் அந்த போராட்டத்தை கலவரமாக மாற்றி மக்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்கள் மீது பணி செய்யவிடாமல் தடுத்ததாக ஓஎன்ஜிசி நிறுவனம் வழக்கும் தொடர்ந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 10 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென்றும், அவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை வாபஸ் வாங்க வேண்டுமென்றும் கதிராமங்கலம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர் இதனையடுத்து இவர்கள் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தஞ்சை நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் பேராசிரியர் ஜெயராமனின் தந்தை காலமானதால் அவருக்கு பரோல் வழங்கி மதுரை உயர் நீதிமன்றம் கிளை உத்தரவிட்டது.

இந்நிலையில், 10 பேரின் ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த தஞ்சை மாவட்ட முதன்மை நீதிமன்றம் பேராசிரியர் ஜெயராமன் தவிர மீதமுள்ள 9 பேருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருக்கிறது. 9 பேருக்கு ஜாமீன் வழங்கி பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் ஜாமீன் வழங்காதது அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*