பாவிகளுக்கு இடமிருக்கும்போது காவிகளுக்கு இடமிருக்காதா? : தமிழிசை சௌந்தர்ராஜன்

தமிழகத்தில் பாவிகளுக்கு இடமிருக்கும்போது காவிகளுக்கு இடமிருக்காதா என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார்.

ஜெ உயிருடன் இருந்தபோதும், கருணாநிதி அரசியலில் ஆக்டிவ்வாக இருந்தபோதும் தமிழகத்தில் பாஜக கட்சியும், தமிழக பாஜக தலைவர்களும் அமைதியாகவே இருந்தார்கள். ஊடகங்களில் பேசும்போது கூட வார்த்தைகளை அளந்து அளந்து பேசுவார்கள். ஆனால் தற்போது ஜெ உயிருடன் இல்லாததாலும், கருணாநிதி தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருப்பதாலும் தமிழகத்தில் பாஜக கட்சி காலூன்ற பார்க்கிறது. முக்கியமாக ஜெயலலிதா, கருணாநிதி என்ற இரு பெரும் ஆளுமைகள் தீவிர அரசியலில் இருந்தபோது தமிழக பாஜக தலைவர்களான, தமிழிசை சௌந்தர்ராஜன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் போன்றோர் தமிழக நலனுக்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் பெருமளவு கருத்து எதுவும் கூறியதுமில்லை பேரணி என்ற ஒன்று நடத்தியதும் இல்லை. ஆனால் இரு ஆளுமைகள் தற்போது இல்லாததால் தமிழகத்தில் இவர்களின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. காவி என்ற சொல்லையே பயன்படுத்தாமல் இருந்தவர்கள் இப்போது மிகவும் தைரியமாக தமிழகத்தில் காவி, ஆர்.எஸ்.எஸ் போன்ற வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர். மதசார்பின்மைக்கு மிகச்சிறந்த உதாரணமாக இருக்கும் தமிழகத்தில் பாஜகவினர் மதவுணர்வை தூண்டி இந்துத்துவா சிந்தனையை திணிக்க பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் இதனை தடுக்க வேண்டிய முதல்வர் பழனிசாமியோ பாஜகவுக்கு முழு அடிமையாக இருக்கிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக இளைஞரணி சார்பில் சென்னையில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த தமிழக அரசுக்கு பாஜக வலியுறுத்தியுள்ளது. பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தமிழகத்தில் விரைவில் வரவுள்ள உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாரக இருப்பதாக கூறினார். தமிழகத்தில் காவிகளுக்கு இடமிருக்கிறதா? என்றால், தமிழகத்தில் பாவிகளுக்கு இடம் இருக்கும் பொழுது காவிகளுக்கும் இடம் கிடைக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். இந்தப் பேரணியின் தொடக்க விழாவில் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, தமிழகத்தில் அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட வேண்டும் என வலியுறுத்தினார். தமிழக அரசுப் பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவித்த அவர், தமிழக கிராமப்புறங்களில் இருந்து மருத்துவப் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 5 சதவிகிதமாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

நெடுவாசல் மக்களும், கதிராமங்கலம் மக்களும் தங்களது வாழ்வாதாரத்தை காப்பதற்காக பல்வேறு வகையிலும் போராடி வருகின்றனர். ஆனால் அவர்களை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. அதனையடுத்து அந்த கிராம மக்கள் கோட்டையை நோக்கி பேரணி செல்லவிருப்பதாக வெளியான தகவலுக்கே தமிழக அரசு காவல்துறையை குவித்து மக்கள் பேரணியாக கோட்டை நோக்கி வந்தால் கைது செய்யும்படி அறிவுறுத்தியிருந்தது. சமீபத்தில் கூட ஆசிரியர் நல கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆனால் பாஜகவுக்கு கோட்டையை நோக்கி பேரணி நடத்துவதற்கு இதே தமிழக அரசு அனுமதியளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*