குஜராத்தில் போராடி வென்ற காங்கிரஸ்!

குஜராத் ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாக்குகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் வெற்றி பெற்றுள்ளார்.

குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா களமிறங்கியதால் இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டுமனெ நினைத்த பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தனது அதிகார பலத்தால் குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கியது. இதனால் பெங்களூர் ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரை அக்கட்சி தங்க வைத்து பாதுகாத்தது. இருப்பினும், நேற்று காலை வாக்குப் பதிவு நடைபெற்ற போது 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் நாங்கள் பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என பகிரங்கமாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்தனர் இதனால் அகமது படேலின் வெற்றி கேள்விக்குறியானது. எனவே, குஜராத் ராஜ்யசபா தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அதில், பாஜகவுக்குதான் வாக்களித்தோம் என இரு எம்.எல்.ஏக்கள் பகிரங்கமாக பேட்டியளித்தனர். அவர்களது வாக்குகள் செல்லாது என அறிவித்து தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதனால் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியது.

இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திடம் இருந்தது. எனவே தேர்தல் ஆணைய அதிகாரிகள் இந்த விஷயம் குறித்து ஆலோசித்து வந்தனர். இதற்கிடையே காங்கிரஸ் மூத்த தலைவர்கள் டெல்லியில், இப்பிரச்னை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தினர், இதன்பிறகு, காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் கட்சி மாறி வாக்களித்த 2 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வாக்குகளும் செல்லாது எனவும் இந்த தேர்தலை ரத்து செய்ய வலியுறுத்தியும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது.. ஆனால் இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி உள்ளிட்ட பாஜகவின் மூத்த அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரசின் 2 எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லும் என அறிவிக்க கோரினர். இதனால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நள்ளிரவு வரை தீவிர ஆலோசனை நடத்தினர். பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, தேர்தல் ஆணையத்தின் வெளியே காத்திருந்தார்.

இரவு 11.30 மணியளவில் தேர்தல் ஆணையம் கட்சி மாறி வாக்களித்து, அதை வெளியே சொன்ன இரு காங்கிரஸ் . எம்எல்ஏக்கள் வாக்குகளும் செல்லாது என அறிவித்தது. ரகசிய வாக்கெடுப்பு முறைக்கு எதிராக அவர்கள் நடந்துகொண்டதை காரணமாக கூறி அந்த வாக்குகளை செல்லாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முன்னதாக, தாங்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்ததாக அவ்விரு எம்எல்ஏக்களும் தெரிவித்த வீடியோவை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்துவிட்டு இந்த முடிவை அறிவித்தது.  இதையடுத்து  நள்ளிரவு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் அகமது பட்டேல் தனக்கு தேவையான 44 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

குஜராத்தில் வெற்றி பெறுவதற்காக தன்னால் முடிந்த அளவு அரசியல் சதுரங்கம் ஆடியது பாஜக ஆனால் தேர்தல் ஆணையம் பாஜகவின் அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு செக் வைத்துள்ளது. இதனால் பாஜக முதன்முறையாக ஒரு மாநிலத்தில் தனது அரசியல் சதுரங்க விளையாட்டில் தோல்வியை தழுவியிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*