மக்களவையில் தமிழில் பேசிய தம்பிதுரைக்கு  எதிர்ப்பு!

மக்களவையின் துணை சபாநாயகர் தம்பிதுரை மக்களவையில் தமிழில் பேசியதற்கு வட இந்திய எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.

இந்திய சுதந்திர போராட்டத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வெள்ளையனே வெளியேறு  இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் உரையாற்றினார். இதனையடுத்து அதிமுகவின் எம்.பியும்,  மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பேசினார்.  அவர் தனது உரையை தமிழில் தொடங்கி வெள்ளையனே வெளியேறு இயக்கம் இந்தியாவின் வெகுஜனத்தை ஈர்த்ததாக கூறி பேசிவந்தார். ஆனால் வடஇந்திய எம்.பிக்கள் தம்பிதுரை தமிழில் பேசுவது எங்களுக்கு புரியவில்லை என்று கூறி கூச்சலெழுப்பினர். இதற்கு பதிலளித்த தம்பிதுரை மற்ற எம்.பிக்கள் ஹிந்தியில் பேசும்போது எனது மொழி தமிழாக இருந்தாலும் அதனை நான் அமைதியாகத்தான் கேட்டுக்கொண்டிருந்தேன். இப்போது ஏன் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென்று கூறி ஆங்கிலத்தில் தனது உரையை பேசினார். மேலும் என்னை ஆங்கிலத்தில் கட்டாயப்படுத்தி பேச வைக்கிறீர்கள் என்றும் மாநில மொழிகளில் பேசும் போது அதனை மொழிப்பெயர்த்து வழங்க பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்றும் ஏற்கனவே அந்த முறை இருந்த நிலையில் தற்போது ஏன் அது மாற்றப்பட்டிருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் நான் தமிழில் பேச முன் அனுமதி வாங்க வேண்டுமா என்று கேள்வி எழுப்பிய தம்பிதுரையிடம், நீங்கள் அனுமதி வாங்கத் தேவையில்லை ஆனால் எங்களுக்கு முன் கூட்டியே தமிழில் பேசப்போவதை கூறவேண்டும் என சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கூறினார். அதற்கு பெயர் அனுமதி தானே என தம்பிதுரை தக்க பதிலடி கொடுத்தார்.

ஒரு மாநிலத்தின் எம்.பி. தனது மாநில மொழியில் பேசியிருக்கிறார். ஆனால் அதற்கு ஹிந்தி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிடுகின்றனர். வடஇந்திய எம்.பிக்கள் ஹிந்தியில் பேசும்போது அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் தமிழக எம்.பிக்கள் போல் ஏன் ஹிந்தி எம்.பிக்களால் இருக்க முடியவில்லை. மேலும் பிரதமர் நரேந்திர மோடியோ அல்லது மத்திய அமைச்சர்களோ தமிழகத்துக்கு வந்து உரையாற்றும்போதும் அவர்கள் ஹிந்தி மொழியில் பேசும் உரிமை அவர்களுக்கு இருக்கும்போது தமிழகத்தை சேர்ந்த ஒரு எம்.பி தனது மாநில மொழியில் பேசுவதற்கான உரிமையில்லையா என்று பல்வேறு தரப்பினரால் கேள்வியெழுப்பப்பட்டு வருகிறது. மேலும் மக்களவையில் நடந்த இந்த விவகாரம் கடும் சர்ச்சையினை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*