ரஜினி அரசியல் பிரவேசம்:2 வாரங்களில் போர் வருமாம் தமிழருவி சொல்கிறார்!

ரசிகர்களை சந்தித்தது முதல் இன்று வரை ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என பல்வேறு குழப்பங்கள் நீடித்து வரும் வேளையில், ரஜினிகாந்த் இன்னும் 2 வாரங்களில் அரசியலுக்கு வருவார் என தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் இது பற்றி கூறியதாவது:-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை போயஸ் கார்டனில் அவரது இல்லத்தில் சமீபத்தில் இரண்டு தடவை சந்தித்துப் பேசினேன். சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தேன். அப்போது தமிழக அரசியல் பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம்.

தமிழ்மக்கள் மீது அவர் நிறைய அன்பும் பாசமும் வைத்திருக்கிறார். தன்னை வாழ வைத்த தமிழக மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டுமென அவர் விரும்புகிறார். அதற்காகவே அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என்று அவர் என்னிடம் உறுதிபட கூறினார்.

மேலும் ‘‘நான் அரசியலுக்கு வர நினைப்பது பணம் சம்பாதிக்க அல்ல. மக்களுக்கு சேவை செய்ய மட்டுமே ’’ என்று ரஜினி என்னிடம் பல முறை கூறி விட்டார். காமராஜர், அண்ணா ஆகியோர் தங்களுக்கு என்று எந்த சொத்தும் சேர்க்காமல் மக்களுக்காக உழைத்தார்கள். அவர்களை முன்னோடியாக கொண்டு அரசியலில் செயல்படுவேன் என்று ரஜினி கூறினார். ரஜினி அரசியலில் சேவையாற்றுவார் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

இன்னும் 2 வாரங்களில் ரஜினி சில உறுதிமொழி அறிவிப்புகளுடன் தனது புதிய காட்சியைத் தொடங்குவார். அந்த உறுதிமொழிகளாவது…

தென்னிந்திய நதிகளை இணைப்பது…
ஊழலை ஒழிப்பது…
ஒளிவுமறைவற்ற வெளிப்படையான அரசியல் செய்வது…

இவ்வாறு காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறினார்.

மேலும் அவர் பின்னால் பாஜக இருந்து செயல்படுகிறது என பலரும் கருதுகின்றனர். ஆனால் எந்த கட்சியையும் சார்ந்து அவர் செயல்படமாட்டார். தனிக்கட்சி தான் தொடங்குவார் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் மீண்டும் அவர் ரசிகர்களை சந்திக்க உள்ளார். விரைவில் இதற்கான கூட்டம் சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. ரசிகர்களுடனான சந்திப்பு முடிந்த பிறகு பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்படும் எனவும் அதில் ரஜினி தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி  கருத்து தெரிவித்த போது போர் வரட்டும் பார்க்கலாம் என்று சொன்னார். தமிழருவி இரு வாரங்களில் அரசியலுக்கு வருவார் என்று சொல்லியிருப்பதன் முலம் அந்த போர்ச்சூழல் உருவாகும் என்று தெரிகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*