சசிகலாவையும் நீக்கினால்தான் இணைப்பு சாத்தியம் : ஓபிஎஸ் அணி!

Chennai: AIADMK General Secretary VK Sasikala before leaving for meeting with Governor CH Vidyasagar Rao at former Chief Minister J Jayalalithaa's memorial in Chennai on Thursday. PTI Photo by R Senthil Kumar(PTI2_9_2017_000299A)

சசிகலாவையும் கட்சியிலிருந்து நீக்கினால்தான் இரு அணிகளின் இணைப்பு சாத்தியமென்று ஓ.பன்னீர் செல்வம் அணி அறிவித்துள்ளது.

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்கு டிடிவி தினகரன் விதித்த 60 நாட்கள் கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர் தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாக கூறி அதிமுக கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். இதனால் அதிமுக கட்சி அதிகாரப்பூர்வமாக மூன்று அணிகளாக உடைந்தது. இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் டிடிவி தினகரனின் துணைப் பொதுச்செயலாளர் பதவி செல்லாது என்று அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவிருப்பதாகவும், நாளை நடக்கவிருக்கும் வெங்கய்யா நாயுடுவின் பதவியேற்பு விழா முடிந்ததும் மோடி தலைமையில் அதிமுகவின் இரு அணிகளும் இணையவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால் அதிமுகவில் புதிய பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இரு அணிகளின் இணைப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம் அணியின் செய்தி தொடர்பாளர் சுவாமிநாதன் கூறுகையில், அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கும் வரையில் அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு அணிகளும் இணையுமா என்று கேள்வியெழுந்துள்ளது. மேலும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதற்கே பாஜக விரும்புவதாகவும் அதனால் விரைவில் சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்படுகிறார் என்ற அறிவிப்பு எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. சசிகலாவால் பதவி பெற்று கட்சியில் பொறுப்பு பெற்று அமர்ந்திருப்பவர்கள் இன்று டெல்லியின் நெருக்கடியால் சசிகலாவையே கட்சியிலிருந்து நீக்கவிருப்பது சசியின் ஆதரவாளர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவ்வாறு நடந்தால் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு கடும் தொந்தரவு கொடுக்கவும் சசிகலா தரப்பு முடிவெடுத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*