சசிகலாவை பொதுச் செயலாளராக அங்கீகரிக்கவில்லை : தேர்தல் ஆணையம்!

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா நியமனம் செய்யப்பட்டதை இதுவரை அங்கீகரிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலலிதா மறைவிற்கு பிறகு தற்போது அவருக்கு எதிராக நிற்கும் ஓ.பன்னீர் செல்வம் உட்பட அனைவரின் ஏகோபித்த ஆதரவோடு சசிகலா அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால் அவரிடம் இருந்து பிரிந்து வந்த முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்கொடி தூக்கினார்.  மேலும் கட்சியும் சின்னமும் எங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்து வந்தார். அதைத் தொடர்ந்து கட்சி விதிமுறைகளின்படியே பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பு பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்தது.

இதையடுத்து சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலாவும், இரட்டை இலையை மீட்க லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவால் துணை பொதுச்செயலாளராக பதவியேற்ற டிடிவி தினகரனும் சிறைக்கு சென்றதால், இரு அணிகளின் இணைப்புக்கு சசிகலா குடும்பத்தை கட்சியிலிருந்து ஒட்டுமொத்தமாக நீக்கினால்தான் இணைப்பு நடவடிக்கை சாத்தியப்படுமென்று கூறிய ஒபிஎஸ் அணியின் கோரிக்கையை ஏற்று இருவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக வாய் வழியாக  எடப்பாடி தரப்பு அறிவித்தனர்.  ஆனால் சிறையில் இருந்து வெளியே வந்த டிடிவி தினகரன் பல்வேறு அதிரடிகளை அரங்கேற்றவே பதறிப்போன  எடப்பாடி அணியினர் இன்று அதிரடியாக தினகரனை கட்சியிலிருந்து நீக்கம் செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் சசிகலாவை நீக்கும் வரை இணைப்பு சாத்தியமில்லை என்று பன்னீர் அணியினர் தெரிவித்திருக்கின்றனர்.

இந்நிலையில் பன்னீர் செல்வம் அணியினர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி குறித்து தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்திருக்கும் தேர்தல் ஆணையம் சசிகலாவை பொதுச் செயலாளராக இன்னும் அங்கீகரிக்கவில்லை எனவும் பொதுச்செயலாளர் நியமனத்தில் சர்ச்சை இருப்பதால் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*