உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யக்கூடாது : உயர் நீதிமன்றம்!

தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசுப் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அதிகரிக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளுக்குக் காரணமாக இருப்பவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை செயலாளர் உதயச்சந்திரன். அரசு பள்ளிகளுக்கென பல்வேறு அதிரடி சீர் திருத்த பணிகளில் ஈடுபட்டு வந்த உதயச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யப்படுவார் என்ற தவல்கள் வெளியானது. இந்த தகவல்கள் தமிழக மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் உதயச்சந்திரன் பணியிட மாற்றம் செய்யபடக் கூடாதென்று பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் 10-ஆம் வகுப்பு மாணவர் ஒருவரின் தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தனது மகன் அடுத்த ஆண்டு 11-ஆம் வகுப்புக்கு செல்லவிருக்கிறார். எனவே அவர் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும். அதற்கான முயற்சியாக வலுவான பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் வரை பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் குழுக்களை நீதிமன்ற கண்காணிப்பில் இயக்க வேண்டும் என்றும், அதில் இடம்பெறும் யாரையும் பணியிட மாற்றம் செய்யக் கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாடத் திட்டங்களை மாற்றி அமைக்க உருவாக்கப்பட்ட இரண்டு குழுக்களில் இடம்பெற்றிருக்கும் எந்த அதிகாரியையும் பணியிடமாற்றம் செய்யக் கூடாது என்று  உத்தரவிட்டார். மேலும், பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன என்று மனுதரார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குற்றம்சாட்டினார். இதனையடுத்து நீதிபதி, பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் குழுக்கள் அளிக்கும் பரிந்துரையை அவர்தான் செயல்படுத்தும் பொறுப்பில் இருப்பதாகவும், குழுக்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வாய்ப்பை செயலாளருக்கு வழங்கும் வகையில் அரசு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் பாடத் திட்டங்களை மாற்றி அமைக்கும் பணி முடியும் வரை உதயச்சந்திரனை பணியிட மாற்றம் செய்யக் கூடாது என்றும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*