எடப்பாடி பழனிசாமிக்கு டிடிவி தினகரன் பகிரங்க எச்சரிக்கை!

தடம் மாறாமல் சென்றால் தமிழக அரசுக்கு எந்த ஆபத்துமில்லை என்று டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 9-ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து டிடிவி தினகரன் இந்த விவகாரம் குறித்து பேசுகையில், என்னை யாரும் கட்சியிலிருந்து நீக்க முடியாது என்று கூறியிருந்தார். மேலும் டிடிவி தினகரனை கட்சியிலிருந்து எடப்பாடி தரப்பினர் நீக்குவதாக அறிவித்திருப்பதால் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். இதனால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் தங்களது பதவியை ராஜினாமா செய்யலாம் என்றும் இதனால் எடப்பாடி பழனிசாமி பெரும் பதற்றத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் திமுகவும் தேவைப்பட்டால் தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படுமென்று அதிரடி காட்டியிருக்கிறது.

இந்நிலையில், டிடிவி தினகரன் தஞ்சாவூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தேர்தல் ஆணைய உத்தரவை மீறி நேற்று தீர்மானம் வெளியிட்டுள்ளனர். துணை பொது செயலாளருக்கான பொறுப்புகள் நிறைவேற்றப்படும். கட்சிக்கு யார் தேவை, யார் தேவையில்லை என்பதை கட்சியின் பொதுச் செயலாளர்தான் முடிவு செய்ய முடியும்.  தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் கொண்டு வந்த தீர்மானம் செல்லாது.

தமிழக அரசு தடம் மாறாமல் சென்று கொண்டிருந்தால் ஆட்சிக்கு ஆபத்து இல்லை. கட்சியின் வளர்ச்சிக்காகவும், நலனுக்காகவும் துணிச்சலோடு செயல்படுவேன். தமிழக அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால், அது குறித்து அப்போது முடிவு செய்யப்படும். 5 ஆண்டுகள் ஆட்சி நிலைக்குமா என்பதை முதலமைச்சர், அமைச்சர்களிடம்தான் கேட்க வேண்டும். 2021-ஆம் ஆண்டும் அதிமுகதான் ஆட்சி அமைக்க வேண்டும என்பதே என் விருப்பம் என்றார்.

இதுவரை டிடிவி தினகரனின் நிலைப்பாடாக கட்சியை தன்னிடம் ஒப்படைத்து விடுங்கள் தன்னால் ஆட்சிக்கு எந்த பிரச்னையும் வராது என்பதே இருந்தது. ஆனால் தற்போது டிடிவி தினகரன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இதனால் தமிழக அரசியலில் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. மேலும் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சிக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறாரென்ற எதிர்பார்ப்பும் அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*