தற்காப்பு முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் : முரசொலி விழாவில் கமல்

திராவிடம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது என்றும் தற்காப்பு முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் என்றும் நடிகர் கமல் கூறியுள்ளார்.

திமுகவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான முரசொலி வெளியாகி 75 ஆண்டுகள் ஆகின்றன. இதனையொட்டி முரசொலியின் பவள விழாவின் வாழ்த்தரங்கம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், கவிஞர் வைரமுத்து, பத்திரிகையாளர் இந்து ராம், நக்கீரன் ஆசிரியர் கோபால், தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், தினமலர் ஆசிரியர் ரமேஷ், டெக்கன் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், ஆனந்த விகடன் மேலாண் இயக்குநர் பா. சீனிவாசன், நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல் ஹாசன், நான் கருணாநிதியின் நீண்ட கால ரசிகனாக இருந்து வருகிறேன். இந்த விழா மேடையின் கீழே ரஜினியுடன் அமரத்தான் முதலில் திட்டமிட்டேன்.ஆனால் விழா மேடையில் அமரக் கிடைத்த மாபெரும் வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்பதற்காகவே மேடைக்கு வந்தேன். தற்காப்பு முக்கியமில்லை. தன்மானம்தான் முக்கியம். நான் இந்தக் கட்சியில் சேர வேண்டும் என்று நினைத்திருந்தால் 1983ம் ஆண்டே இணைந்திருப்பேன். அந்த ஆண்டு கருணாநிதியிடம் இருந்து எனக்கு ஒரு தந்தி வந்தது. அதில், நீங்கள் ஏன் திமுகவில் சேரக்கூடாது என அவர் கேட்டிருந்தார். அந்தத் தந்தியை பார்த்த பின் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டேன்.. இன்று வரை நான் கருணாநிதியின் கேள்விக்குப் பதில் சொல்லவேயில்லை. அவரது பெருந்தன்மை என்னவென்றால் இதுவரை அதுகுறித்து என்னிடம் அவரும் கேட்கவே இல்லை. அதே மரியாதை இந்த மேடையிலும் எனக்குக் கிடைக்கும் என்பதால்தான் மேடைக்கு வந்தேன்.

திராவிடம் இத்தோடு முடிந்தது என சிலர் பேசுகிறார்கள். ஆனால் நான் ஏற்கனவே ஒரு பேட்டியில் கூறியதைப் போல தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் இருக்கும் வரை திராவிடமும் இருக்கும். திராவிடம் என்பது தமிழகம், தென்னகத்தோடு நிற்கவில்லை. திராவிடம் என்பது நாடு தழுவியது. சிந்து சமவெளி நாகரீகம் தொடங்கி தமிழகம் வரை வந்தது திராவிடம். திராவிடம் என்பது மொத்த இந்தியாவுக்கும் சொந்தமானது. இதை மொத்த நாடும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கமல் கூறினார்.

அவரது இந்த பேச்சில் தற்காப்பு முக்கியமில்லை தன்மானம்தான் முக்கியம் என்று கமல் கூறியது யாருக்காக கூறினார் என்பது புதிய கேள்வியாக எழுந்துள்ளது. அவர் இந்த வார்த்தைகளை நடிகர் ரஜினுக்குத்தான் கூறியுள்ளார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்ன்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*