திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது: கமல்ஹாசன்

முரசொலி பத்திரிகையின் 75-ஆவது ஆண்டு பவளவிழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றார். மேலும் இதில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரபு மற்றும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர். சமீப காலமாக தீவிர அரசியல் பேசும் கமல், இதில் கலந்துகொண்டது முக்கியமான நிகழ்வாக பார்க்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், “நான் ரசித்த முதல் தமிழ் சிவாஜியுடையது. அதன் பின்னர், அந்தத் தமிழுக்குச் சொந்தக்காரர் கலைஞர் என்று தெரிந்தது, முதலில் நான் அவரது ரசிகன். இந்த விழாவுக்கு என்னை அழைத்தபோது, ரஜினி இந்த விழாவுக்கு வருகிறாரா?, பேசுகிறாரா? என்றுதான் கேட்டேன். அவர் பேசவில்லை என்றதும், நானும் பார்வையாளராக பங்கேற்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இப்போது தற்காப்பு முக்கியமில்லை, தன்மானமே முக்கியம். இந்த விழாவில் கலந்து கொள்கிறேன் என்றதுமே, நீங்கள் கழகத்தில் சேரப் போகிறீர்களா? என்ற கேள்வி எழுகிறது. நான் திமுக-வில் சேர விரும்பியிருந்தால், 1989-ல் கலைஞர் அழைத்தபோதே சேர்ந்திருப்பேன். அரசியல் பேசுவதற்கான மேடை இது இல்லை. ஒருவரை ஒருவர் கிண்டல் செய்பவர்கள் இங்கு ஒரே மேடையில் இருக்கிறார்கள். இந்த கலாசாரத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்றுதான் நான் இங்கு வந்தேன். திராவிடம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமோ தென்னிந்தியாவில் மட்டுமோ இருப்பது இல்லை. சிந்து நாகரிகம் முதலே திராவிடம் உள்ளது. தேசிய கீதம் ‘ஜனகனமன’-வில் திராவிடம் உள்ள வரை திராவிடம் இருக்கும், திராவிடம் என்பது வாக்குகளின் எண்ணிக்கை இல்லை. திராவிடம் என்பது மக்கள் சக்தி. திராவிடத்தை யாராலும் அழிக்க முடியாது” என்று பேசினார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*