தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் : மு.க. ஸ்டாலின்

தமிழக அரசுக்கு எதிராக தேவைப்பட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டிடிவி தினகரனை கட்சியிலிருந்து ஒதுக்கி வைப்பதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் அறிவித்தையடுத்து டிடிவி தினகரன் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதனால் பதறிப் போன எடப்பாடி தரப்பினர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதனால் அதிமுகவின் உட்கட்சி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி தரப்பினர் அறிவித்ததால் கொந்தளிப்பில் இருக்கும் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏக்களால் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்நேரமும் சிக்கல் எழலாம் என்ற நிலை உருவாகியிருக்கிறது. மேலும் இவ்விவகாரத்தால் தமிழகத்தின் அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுகவின் பல மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், அதிமுக அணிகளுக்கிடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தமிழகத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது.  அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்தபோதே அசாதாரண சூழ்நிலை ஏற்பட தொடங்கிவிட்டது. இதனால், மக்கள் துன்பத்துக்கும் துயரத்துக்கும் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு ஒரு முடிவு வேண்டும்.  தேவைப்பட்டால், தமிழக அரசுக்கு எதிராக திமுக சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம். என்று கூறினார். மு.க.ஸ்டாலினின் இந்த திடீர் அறிவிப்பால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் என்னென்ன நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள் என்பதில் பதற்றமடைந்திருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, திமுகவின் இந்த அறிவிப்பு மேலும் பதற்றத்தையும், அதிர்ச்சியையும் அதிகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதில் தமிழக அரசு வெற்றி பெறும் என்று கூறினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*