நீட் தேர்வு : தமிழக அரசின் கதவுகள் மூடப்பட்டன!

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசின் அரசாணையை தடை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மத்தியில் ஆளும் பாஜக அரசு மருத்துவ படிப்பில் நீட் தேர்வு என்ற முறையை கொண்டு வந்தது. தமிழகத்தில் உருவான கடும் எதிர்ப்புகளையும் மீறி பாஜகவின் பினாமியாக செயல்பட்டு வரும் தமிழக அரசின் துணையோடு அந்த தேர்வையும் நடத்தி முடித்தது. இதில் தமிழத்தை சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் பின்னடவை சந்தித்தது. இதனால் கடும் கொந்தளிப்பில் இருக்கிறது தமிழகம். இதனால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதாக கூறி தமிழக அமைச்சர்களும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் மோடியையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இதற்கிடையே தமிழக மருத்துவர் மாணவர் சேர்க்கையில் 85 சதவீதம் உள் இட ஒதுக்கீடு பெறும் வகையில், தமிழக அரசு அரசாணை கொண்டு வந்தது.  இந்த அரசாணையை எதிர்த்து சி.பி.எஸ்.இ. மாணவர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனையடுத்து, தமிழக அரசின் அரசாணைக்கு நீதிமன்றம் தடை விதித்தது.

இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்ற தடையை எதிர்த்து தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தது. தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசாணையை ரத்து செய்ததை தடை செய்ய முடியாது என்று கூறி தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும் கல்வியில் சமநிலை ஏற்பட வேண்டும் என்பதால்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.  நாடு முழுவதும ஒரு முறை பின்பற்றப்படும்போது, தமிழகம் மட்டும் அதில் வேறுபடுவது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் அடைந்திருக்கும் தோல்வி பகிரங்கமாக வெளிப்பட்டிருக்கிறது. மேலும் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் இனி தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசிடம் மட்டுமே முறையிடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்ற நினைப்பில் பாஜக கொண்டு வரும் அனைத்து திட்டங்களுக்கும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரவு தெரிவித்தும், அதனை செயல்படுத்தியும் வருகிறார். இதனால் தமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய முறையில் அழுத்தம் கொடுக்குமா இல்லை வழக்கம்போல் நீட் தொடர்பாக பேசப்போகிறோம் என்று கூறி அமைச்சர்களும், முதல்வரும் டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர்களையும், மோடியையும் சந்தித்து மட்டும் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*