பாஜகவை சமாளிப்பது எப்படி ? : காங்கிரஸ் ஆலோசனை!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று 18 எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளார்.

பாஜக கட்சி தனது பெரும்பான்மையை பயன்படுத்தி தனக்கு எதிராக இருக்கும் கட்சிகளை சிதைத்துக் கொண்டிருக்கிறது. தற்போது பாஜகவின் பார்வை அதன் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸ் மேல் விழுந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி குஜராத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில் அனைத்து இடங்களையும் கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி அக்கட்சியை சிதைக்க ஆரம்பித்தது. ஆனால் ஒருவழியாக தனது கட்சியை சிதையவிடாமல் பாதுகாத்து அந்த தேர்தலில் வென்றுவிட்டது காங்கிரஸ். இதனையடுத்து இனிமேலும் அமைதியாக இருந்தால் பாஜக எதிர்க்கட்சிகளின் சிதைப்பு வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு அனைத்து எதிர்க்கட்சிகளையும் சிதைத்துவிடும் என்று கருதியது காங்கிரஸ். அதனை தடுத்து நிறுத்தும் செயல்களில் தீவிரமாக இறங்க  திட்டமிட்டது.

இதையும் படிச்சிருங்க

மீண்டெழும் காங்கிரஸ் : http://bit.ly/2fuwRi5

இந்நிலையில், மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு பாராளுமன்றத்தில் நெருக்கடி கொடுக்கும் விதத்தில் செயல்படுவது குறித்து ஆலோசிக்க, 18 எதிர்க்கட்சியினருடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடையவிருக்கும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருப்பதால் பரபரப்பாக பேசப்படுகிறது. இதற்கான அழைப்பிதழை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் எதிர்க்கட்சியினருக்கு அனுப்பியுள்ளார்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாரம் யெச்சூரி, திமுக உட்பட பல எதிர்க்கட்சியினர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது. மிக முக்கியமாக, எதிர்க்கட்சிகளை சிதைக்கும் வேலைகளில் ஈடுபடும் பாஜகவுக்கு முட்டுக்கட்டை போடுவது குறித்த ஆலோசனை பிரதானமாக இருக்குமென்று தெரிகிறது. பாஜக அரசை ஒற்றுமையுடன் எதிர்கொள்ள தங்களுக்குள் நல்ல ஒருங்கிணைப்பை வளர்க்கவும் எதிர்க்கட்சிகள் மாதத்திற்கு ஒரு முறை சந்திப்பது என ஏற்கனவே நடந்த எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமிறங்கியிருக்கும் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியினர் பாஜகவின் அரசியல் சதுரங்க விளையாட்டுக்கு செக் வைப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*