மோடியிடம் நீட் குறித்து பேசுவாரா எடப்பாடி பழனிசாமி

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடியை நாளை சந்தித்து பேசவுள்ளார்.

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, நீட் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இந்த தேர்வில் தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் தமிழக மக்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கின்றனர். இதனையடுத்து தமிழகத்தில் நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்று தமிழக அரசு கோரி வருகிறது. மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்காமல் இருக்கும் வகையில் 85 சதவீத உள் ஒதுக்கீடு அளித்து அரசாணை ஒன்று தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணையும் சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. மேலும் இது தொடர்பாக, தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். ஆனால் இவர்களின் சந்திப்பு வெறும் சந்திப்பு அளவிலேயே நிற்கிறதேயொழிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் இன்னும் தொடங்கியபாடில்லை.

இந்நிலையில், , துணை குடியரசுத் தலைவராக வெங்கய்யா நாயுடு பதவியேற்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள உள்ளார். அதனையடுத்து நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசவுள்ளார். இந்த சந்திப்பின்போது, நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிப்பது தொடர்பாக பேச உள்ளதாக தெரிகிறது.  மேலும் இதுவரை எக்கச்சக்கமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் தமிழக நலன் சார்ந்த திட்டங்களை விவாதித்ததாக அசராமல் கூறினார். ஆனால் அந்த சந்திப்பில் மாநில நலன் பேசப்பட்டதா இல்லை ஆட்சி மற்றும் கட்சியின் நலன் தொடர்பாக பேசப்பட்டதா என்பது அவருக்கும் மோடிக்குமே வெளிச்சம். இந்த சந்திப்பில் கூட நீட் குறித்து பேசப்போகிறாரா இல்லை அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து பேசப்போகிறாரா என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமி மோடியிடம் என்ன பேசினாலும் வெளியில் வந்து ஊடகங்களிடம் நீட் தொடர்பாக பேசினேன் என்றுதான் சொல்வார். அவர் உண்மையில் நீட் தொடர்பாகவே பேசினாலும் பாஜகவின் பினாமியாக செயல்பட்டு வரும் இந்த அரசு தமிழகத்தில் இருக்கும்வரை நிச்சயம் தமிழகத்துக்கு நீட்டிலிருந்து விலக்கு கிடைக்காது என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. தமிழக அமைச்சர்களும் தமிழக முதலமைச்சரும் நீட் தொடர்பாகவும் தமிழக நலன் தொடர்பாகவும் பிரதமர் மோடியை சந்திப்பதை மட்டும் வழக்கமாக வைத்திருக்காமல் அந்த சந்திப்பின் போது ஆக்கப்பூர்வமான வாதங்களையும் மிகப்பெரிய அழுத்தங்களையும் கொடுத்தால் மட்டுமே மத்திய அரசு பணியுமே தவிர பொக்கே கொடுத்து சால்வை போர்த்திவிட்டு வந்தால் நிச்சயம் பாஜக தமிழக அரசை வளைத்துக் கொண்டுதான் இருக்குமென்றும் அனைவராலும் கூறப்பட்டு வருகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*