ராபர்ட் பயஸ் – ஜெயக்குமாரை விடுவிக்க மத்திய அரசு கடும் எதிர்ப்பு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனையை அனுபவித்து வரும் ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமாரை முன்கூட்டியே விடுவிக்க கூடாதென்றும் அதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி இந்திய உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து, கடந்த 26 ஆண்டுகளாக நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேரும் சிறைத் தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இதனிடையே ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ‘ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளோம். ஆயுள் தண்டனை கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது வழக்கம். ஆனால், நாங்கள் மட்டும் 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் விடுவிக்கப்படாமல்  இருக்கிறோம். எனவே, எங்களை உடனடியாக விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரியிருந்தனர். இந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 9-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்வதற்கு மேலும் சில நாட்கள் அவகாசம் கோரியது. இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகிய இருவர் ஆயுள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும். இருவரையும் முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிப்பதற்கு தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று தனது பதில் மனுவில் கூறியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*