அதிமுகவில் அனைவருமே 420தான் : ஜெ.அன்பழகன்

அதிமுகவில் உள்ள 3 அணியுமே 420தான் என்று திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி பழனிசாமி அணியினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் இருவருக்குமிடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வளவு நாளும் தமிழக அரசுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுக்காமல் இருந்த டிடிவி தினகரன் நேற்று, தடம் மாறாமல் சென்றால் தமிழக அரசுக்கு ஆபத்தில்லை என்று பகிரங்க எச்சரிக்கை விடுத்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அதிமுக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி, தற்போது அதற்கு எதிராக செயல்படுவதால், அவரை 420 என குறிப்பிட்டார். அதற்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,தினகரன் ‘420’ என குறிப்பிட்டது அவருக்கு தான் பொருந்தும் என கருதுவதாக தெரிவித்தார். இதனால் இருவரும் பகிரங்க வார்த்தை போரில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி சார்பில் அண்ணா அறிவாலயத்தில் பாவேந்தர் பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடைபெற்றது. இதை மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுகவில் உள்ள 3 அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள். மொத்தத்தில் அதிமுகவில் உள்ள 3 அணியுமே 420தான். அதிமுகவில் நம்பர்-1 420 யார் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது. இந்த ஆட்சி மீது தேவைப்பட்டால் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என்றுதான் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார். எனவே உடனே கொண்டு வருவதாக அர்த்தம் இல்லை என கூறினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*