உ.பி அரசு மருத்துவமனையில் 2 நாட்களில் 30 குழந்தைகள் பலி!

யோகி ஆதித்யநாத் ஆளும் உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கடந்த 2 நாட்களில் மட்டும் 30 குழந்தைகள் பலியாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி வகித்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்து உத்தரபிரதேசம் மாநிலத்தை முன்னேறுகிறேன் என்று கூறி பல சர்ச்சைக்குரிய செயல்பாடுகளிலேயே ஈடுபட்டு வருகிறார். பசுக் காவலர்கள் உத்தரபிரதேசத்தில் செய்யும் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமின்றி ஆண்ட்டி- ரோமியோ என்ற அமைப்பும் காதலர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. மேலும் அங்கு அதிகளவில் பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருகின்றன. சமீபத்தில்கூட உத்தரபிரதேச மாநிலம் சட்டசபைக்குள்ளேயே வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இதனால் அங்கு சட்ட ஒழுங்கு என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கிறது. இதுகுறித்து உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எதுவும் பேசாமலும், தகுந்த நடவடிக்கை எடுக்காமலும் மௌனம் சாதித்து வருகிறார்.

இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் லோக்சபா தொகுதியான கோரக்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மூளை வீக்கம் ஏற்பட்டுகடந்த இரண்டு நாட்களில் 30 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இரு நாட்கள் முன்புதான் இந்த மருத்துவமனையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆய்வு நடத்தியிருந்தார். ஆனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை குறித்து அவரது கவனத்திற்கு  வராமல் போனதா இல்லை யோகி ஆதித்யநாத் அதனை கண்டுகொள்ளவில்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் விநியோகஸ்தருக்கு ரூ.66 லட்சம் பாக்கியை அரசு செலுத்தாததால், ஆக்ஸிஜன் சப்ளை பாதிக்கப்பட்டதாகவும் அதனால் இந்த விபரீதங்கள் நடந்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை மோசமான நிர்வாகத்திற்கு பெயர் பெற்றது. கடந்த வருடம், ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் encephalitis நோயால் பாதிக்கப்பட்டு இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 920 குழந்தைகளில் 224 குழந்தைகள் பலியானது குறிப்பிடத்தக்கது.

நாட்டையே உலுக்கியிருக்கும் இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும், அரசியல் தலைவர்களும் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். மேலும் இந்த இழப்புக்கு மாநில அரசே பொறுப்பேற்க வேண்டுமென்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரபிரதேச மாநில அரசு உத்தரவிட்டிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*