ஓஎன்ஜிசி நிறுவனத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்தான் குற்றவாளிகள் : ஜெயராமன்

கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தை தடுக்க தவறிய அதிகாரிகள்தான் குற்றவாளிகள் என்று சிறையிலிருந்து வெளிவந்த பேராசிரியர் ஜெயராமன் கூறியுள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 30-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் பதிக்கப்பட்டிருந்த எண்ணெய்க் குழாயில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு எண்ணெய் கசிந்தது. கசிந்த எண்ணெய் குடிநீரிலும் கலந்ததால் அப்பகுதி மக்கள் குடி நீருக்கே அலையும் அவல நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் மக்கள் போரட்டத்தினை கலவரமாக மாற்றி அவர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் மீத்தேன் திட்ட எதிர்ப்புக் குழு தலைவர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை கைது திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இதனையடுத்து  ஓஎன்ஜிசி நிறுவனம் கதிராமங்கலத்திலிருந்து வெளியேற வேண்டுமென்றும், கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் கூறி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.  பேராசிரியர் ஜெயராமன் மற்றும் 9 பேருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கி கடந்த 9-ஆம் தேதி நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 43 நாட்களாக திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரும் இன்று காலை 8 மணிக்கு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேராசிரியர் ஜெயராமன் பேசுகையில், கதிராமங்கலத்தில் அமைதியான முறையில் நியாயம் கேட்டு போராடிய மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலவரமாக்கினர். இந்த சம்பவத்தில் கதிராமங்கலம் கிராம குடிநீரை நஞ்சாக மாற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், இதை தடுக்க தவறிய அதிகாரிகளும், தடியடி நடத்திய காவல்துறையினரும்தான் குற்றவாளிகள். சமூக அக்கறையோடு போராடுவோரைத் தமிழக அரசு கனிவோடு பார்க்க வேண்டும். வருங்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. காவிரி படுகை இந்திய வரைபடத்திலிருந்தே காணாமல் போகக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. எங்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சிகள், அமைப்புகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம். என்று பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*