காவி அடி கழகத்தை அழி : பாஜக-வை விமர்சித்து நமது எம்.ஜி.ஆர் அதிரடி!

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் காவி அடி கழகத்தை அழி என்ற தலைப்பில் பாஜகவை கடுமையாக விமர்சித்து கவிதை வெளியாகியுள்ளது.

டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதாக எடப்பாடி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியதால் இரண்டு அணிகளாக இருந்த அதிமுக தற்போது மூன்று அணிகளாக செயல்பட்டு வருகிறது. மேலும் ஓ.பன்னீர் செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் இணையவிருப்பதாகவும், பாஜகவின் அறிவுறுத்தல் படியே டிடிவி தினகரனை நீக்கி எடப்பாடி பழனிசாமி அணியினர் தீர்மானம் நிறைவேற்றியதாகவும் கூறப்பட்டது. ஆனால் சசிகலாவை நீக்கும் வரையில் இரு அணிகள் இணைப்பு சாத்தியமில்லை என்று ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துவிட்டனர். மேலும் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவதைத்தான் பாஜக மேலிடமும் விரும்புவதால் சசிகலாவும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக மிக விரைவில் எடப்பாடி பழனிசாமி அணியினரிடமிருந்து அறிவிப்பு வெளியாகுமென்று தகவல்கள் வெளியாகின. இதனால் டிடிவி தினகரன் அணியினர் கடும் கோபமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களால் பழனிசாமி தலைமையிலான அரசு எந்நேரமும் கலைக்கப்படலாமென்றும் தகவல்கள் வெளியாகின்றன.

இந்நிலையில், சமீபகாலமாகவே அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில் பாஜகவை கடுமையாக விமர்சித்து கவிதை வெளியாகி வருகின்றன. அதன்படி இன்று வெளியான நமது எம்.ஜி.ஆரில் காவி அடி, கழகத்தை அழி என்கிற தலைப்பில் வெளியாகியுள்ள அந்த கவிதையில் உத்தர்காண்ட், அருணாச்சல் பிரதேசம், மணிப்பூர், பீகார், கோவா என பல்வேறு மாநிலங்களில் பாஜக பின் வாசல் வழியாக நுழைந்தது அதிகாரத்தை பிடித்ததாக எழுதப்பட்டுள்ளது. புதுச்சேரி, மணிப்பூரில் ஆளுநர்களை அரசியல் ஏஜெண்டுகளாக்கியுள்ளதாகவும், நீதித்துறை, வருமானவரி, அமலாக்கப் பிரிவு, தேர்தல், ஆணையம், ஆகிய தன்னாட்சி அமைப்புகளை தலைகுனிய வைத்துள்ளது பாஜக என்றும் அந்த கவிதையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கரன்சியை வெற்றுக்காகிதமாக்கி கருப்புப் பணம் ஒழித்தோம் என்று கதையளப்பவர்கள் இவர்கள் முன்னின்று நடத்தியதெல்லாம் மோசடிகளே என்றும், மோடியா? இந்த லேடியா என்று சவால் விட்ட இயக்கத்தை மூன்றாக பிளந்ததும் ஈரிலையை முடக்கி இன்னல் தந்ததும்தானே என்றும் கடுமையாக விமர்சித்திருக்கிறது. இறுதியாக இவர்கள் செய்ததெல்லாம் அவர்களுக்கு ’சவால் விட்ட இயக்கத்தை மூன்றாகப் பிளந்ததும் இரட்டை இலைச் சின்னத்தை முடக்கி இன்னல் தந்ததும்தான்’ என கூறப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சர்களும், ஓ.பன்னீர் செல்வமும் பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டினில் இருக்கும் நிலையில் நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையில் வெளியாகியிருக்கும் கவிதை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நமது எம்.ஜி.ஆர் நாளேடு தினகரனின் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நமது எம்.ஜி.ஆர் நாளேட்டில் வெளியாகும் பாஜகவுக்கு எதிரான கவிதைகள் மூலம் தினகரன் பாஜகவை பகிரங்கமாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார் என்று கருதப்படுகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*