கோரக்பூர் குழந்தைகள் மரணம் 63-ஆக உயர்வு!

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூர் மாநிலத்தில் உள்ளது பாபா ராகவ் தாஸ் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி. இங்கு ஆக்ஸிஜன் சப்ளையருக்கு 66 லட்சம் ரூபாய் பாக்கியை உத்தரபிரதேச அரசு செலுத்தாததால் இம்மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை பாதிக்கப்பட்டது. இதனால் கடந்த இரண்டு நாட்களில் அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் மூளை வீக்கம் அடைந்து மரணமடைந்தனர். நாடு முழுவதும் இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ஆண்ட்டி-ரோமியோ அமைத்து காதலர்களை வதைக்கும் உ.பி.அரசு குழந்தைகளை காக்க தவறிவிட்டதாகவும், இந்த சம்பவத்துக்கு மாநில அரசுதான் பொறுப்பேற்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சியினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மேலும் துயரம் ஏற்படுத்தும் விதமாக கோரக்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 63-ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு, குழந்தைகளின் மரணம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உத்தரபிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த்நாத் சிங்குக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சித்தார்த்நாத் சிங், குழந்தைகளின் மரணம் தொடர்பாக முறையான விசாரணையும், தகுந்த நடவடிக்கையும் எடுக்கப்படும். இந்த விவகாரத்தை எதிர்க்கட்சியினர் அரசியலாக்க வேண்டாம் என்று பேசினார். இந்த விவகாரம் தொடர்பாக கோரக்பூர் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராஜீவ் சுக்லா, ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரழந்ததை மறுத்துள்ளார். குழந்தைகளின் மரணம் குறித்த நீதி விசாரணைக்கு உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், போன்றோர் கோரக்பூர் மருத்துவமனைக்கு நேரில் செல்ல திட்டமிட்டிருக்கின்றனர்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*