தரமணி: ராமிற்கு பாராட்டுகள்- கன்னியாரி

ஒரு திரைப்படம் என்ற கலைப்படைப்பின் வெற்றியை எது தீர்மானிக்கிறது, அரங்கு நிறைந்த காட்சிகளா, அவப்போது அரங்கில் எழும் கரவொலியா எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நினைவில் நீங்காது நிற்கும் அத்திரைப்படத்தின் காட்சி பிம்பங்களா என்று அடுக்கினால், எந்த ஒரு திரைப்படப் படைப்பு அதன் பார்வையாளனை தன்னுடன் ஈர்த்து பார்வையாளனையும் திரைக்கதையின் போக்கில் தன்னுடன் ப‌யணிக்க வைக்கிறதோ அந்த சூட்சுமம் தான் அந்த திரைப்படத்தின் வெற்றியாக இருக்கிறது.

அந்த வகையில் கற்றது தமிழ், தங்க மீன்கள் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ராமின் புதிய வரவான தரமணி ஒரு வெற்றிப்படம் என்று சொல்லலாம். போதிய விளம்பரம் இல்லாமல் அரங்கு நிறைந்த காட்சிகள், திரையிடலின் ஊடே அவப்போது ரசிகர்களின் கரவொலி ஆகியவற்றுடன் பார்வையாளனை வெறும் பார்வையாளனாக மட்டும் வைத்திராமல் அவனை திரைக்கதையொடு ஒன்றிணையச்செய்து கதை சொல்லும் பாங்கில் தரமணி சமகால தமிழ்ச் சினிமாக்களில் இருந்து விலகி தனித்து நிற்கிறது.

இது முழுக்க முழுக்க ஒரு காதல் திரைப்படம். ஆனால் கண்டிப்பாக இது வழக்கமாக திரைப்படங்களிலும் பொதுவிலும் நண்பர்கள் மூலமும் அறிந்த காதல் கதைகளை போன்ற காதல் கதையை அடிப்படையாக கொண்ட திரைப்படம் அல்ல. ஒரு காதல் அந்த இருவரின் உறவுக்குள் அகச்சிக்கல் மற்றும் புறவயமான காரணிகளால் எப்படியான அழுத்தங்களை ஏற்படுத்த வல்லது என்பது அப்பட்டமாக முகத்தில் அடித்துச் சொல்லும் ஒரு காதல் கதை. ஏதொ ஒரு சமயத்தில் காதலில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் கடந்து போகும் சம்பவங்களின் கோர்வை என்று கூட கொள்ளலாம்.

இது வெறும் காதல் படம் மட்டுமா இல்லை. தரமணி முதல் தொடங்கி ஒஎம்ஆர் வழியாக நீண்டு சிறுசேரி வரை பரந்து கிடக்கும் தகவல் தொழிற் நுட்ப துறை நிறுவனங்களில் இரவும் பகலுமாக உழைக்கும் இருபத்தியோராம் நுற்றாண்டின் முதல் தலைமுறைப் பெண்களின் கதை. இதில் தகவல் தொழிற் நுட்ப துறை என்பது ஒரு குறியீடு மாத்திரமே. பள்ளி முதல் அரசு அலுவலகங்கள் வரை பணி செய்யும் பெண்கள் சந்திக்கும் இன்னல்களை அப்பட்டமாக சொல்லும் கதை. பணி செய்யும் பெண்களுக்கான படமா என்றால் அதுவும் இல்லை. பெண்களின் சக உயிரியாக இருக்க வேண்டிய ஆண்கள் எந்த அளவு பெண்களை புரிந்து கொள்கிறார்கள் என்பதை சொல்லும் கதை.

ஆண் பெண் உறவு என்பது மிக மிக இலகுவானதும் அதே நேரம் மிக மிக சிக்கலானதுமான ஒரு உறவுப் பிணைப்பு. இந்த உறவுப்பிணைப்பை அதன் சிக்கல்களை அதற்கே உரிய உண்மைத் தன்மையொடு திரைமொழியில் சொல்வது என்பது கடும் சவால் நிறைந்த விசயம். இதை திரை மொழியில் கொண்டு வருவது என்பது தமிழில் மிகச் சிலராலேயே செயல்படுத்தப்பட்டுள்ளது. “அவள் அப்படித் தான்” படத்தை இயக்கிய ருத்ரய்யா அதில் முக்கியமானவர். அந்த வரிசையில் ஒருவராக ராம் இருக்கிறார் என்று கருதலாம். சமீப காலத்தில் மனித உறவுகளுக்குள்ளான சிக்கல்களை புரிதல்களை திரை மொழியாக்குவதில் மலையாளத் திரைப்படங்கள் முன்னிலையில் இருக்கின்றன என்ற எண்ணம் பரவலாக உண்டு. தமிழில் அத்தகைய முயற்சிகள் மிக மிக குறைவாகவே உள்ளன. இந்த நிலையில் இப்படி ஒரு முயற்சியை தொடர்ந்து தமிழில் மேற்கொள்ளும் இயக்குனர் ராமிற்கு பாராட்டுக்கள்.

தரமணி திரைப்படத்தை முழுக்க தனது தோளில் சுமந்து நிற்பவர் ஆன்ட்ரியா. தனது கதாப்பாத்திரத்தை மிக நேர்த்தியாக முன்னெடுத்து சென்றிருப்பத்தை ஒவ்வொரு காட்சியிலும் உணரலாம். ஆன்டிரியாவின் மிகச் சிறந்த நடிப்பிற்கு பெயர் பெற்ற மலையாளத் திரைப்படமான அன்னயும் ரசுலும் பட நடிப்பிற்கு சற்றும் குறைவில்லாத நடிப்பு தரமணியில். முதற்படமாக இருந்தாலும் அதன் சுவடுகளை சிறிதும் வெளிக்காட்டமல் முயன்றிருக்கிறார் வசந்த் ரவி.

யுவன் சங்கரின் இசையும் நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளும் எப்போதும் ராமின் படங்களுகு துணையிருப்பதைப் போல் தரமணியிலும். மிகச் சிறந்த இசை என்பது மெளனம் என்பதை தனது பின்னணி இசையில் சொல்லியிருக்கிறார் யுவன். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மிகப்பெரிய பலம். அஞ்சலியும் அழகம்பெருமாளும் நிறைவு.

அதிகப்படியான கழுகுப் பார்வை காட்சியமைப்பு தேவையா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதே போன்று நாகூர் பகுதி காட்சிகளும், மதம் சார்ந்த இடம் மட்டும் தான் ஒரு மனிதனை முழுமையாக திருத்த முடியுமா என்ற கேள்வி இதன் மூலம் எழுகிறது.

படத்தின் இடையிடையே வரும் ராமின் ஸ்டேட்ஸ் மெசெஜ்கள் முக்கியமானவை. புகழ் பெற்ற மெக்சிகன் திரைப்பட இயக்குனரான அல்பொன்சோ குவரொன் இயக்கி 2001-ல் வெளியான திரைப்படம் Y Tu Mama Tambien. ஒரு மூன்று நண்பர்களின் பயணத்தை அடிப்படையாக கொண்ட திரைப்படம் இது. இந்த திரைப்படத்தில் உள்ள முக்கிய அம்சம் என்னவென்றால் உலகமயமாக்கலின் விளைவுகளை அது மெக்சிகன் மக்களை எந்த அளவு பாதித்துள்ளது என்பதை இடையிடையே கதையோடு போகிற போக்கில் சொல்லிச் செல்வார், இயக்குனர் ராமும் இன்றைய நிலையில் உலகமயமாக்கல் நமது வாழ்வில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை தரமணி என்ற புதிய குடியெற்ற பகுதியின் பின்னணியில் ஸ்டெஸ்டஸ் மெசேஜ்களாக நமக்கு பின் மண்டையில் அடித்து சொல்லிவிட்டு சென்று கொண்டே இருக்கிறார், அது திரையரங்கையே அதிர வைக்கிறது.

ஆக வெப்பம் புழுக்கமும் நிறைந்த தரமணி ராமின் கைகளில் மழை நீராடி குளிர்ந்து மிளிர்கிறது.

 

எழுதியவர்: கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*