பாஜகவின் பகல் கனவு : நாராயணசாமி

புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாமலேயே, ஆட்சியை பிடிக்க பாஜக முயற்சிக்கிறது எனவும் அது ஒரு பகல் கனவு எனவும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் கிரண்பேடியை ஆளுநராக நியமித்து பாஜக தனது அரசியல் விளையாட்டை விளையாடி வருகிறது. கிரண்பேடி பாஜக பிரமுகர்கள் மூன்று பேரை அரசின் சிபாரிசு இல்லாமலேயே நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்தார். இதன் மூலம் புதுச்சேரியின் புறவாசல் வழியாக பாஜகவை கிரண்பேடி அழைத்து வந்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு பரவலாக வைக்கப்படுகிறது. மேலும் கிரண்பேடி நியமித்த எம்.எல்.ஏக்களை ஏற்க முடியாது என்று புதுச்சேரி சபாநாயகர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் திட்டவட்டமாக கூறிவிட்டனர். இதனையடுத்து நியமன எம்.எல்.ஏக்களும் அவர்களது ஆதரவாளர்களும் சட்டசபையை முடக்குவோம் என்று பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்து வந்தனர். இந்த விவகாரத்தை வைத்து புதுச்சேரியில் பாஜக அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி ஆட்சியை பிடிக்க நினைப்பதாகவும் பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி மாநில ஆளுநர் நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் அரசு சிறப்பாக செயல்படுகிறது. இங்கு ஆட்சியை கலைக்க வேண்டும் என பாஜக திட்டமிட்டு வருகிறது. ஆட்சியை பிடிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்ற மாநிலங்களில் உள்ள ஆட்சியில் விரிசல் ஏற்படுத்தி, உள்ளே நுழைந்ததுபோல் புதுச்சேரியிலும் நுழைவதற்கு பாஜக முயற்சித்து வருகிறது. இது ஒருபோதும் நடக்காது. ஒரு எம்.எல்.ஏவும் இல்லாமலேயே, ஆட்சியை பிடிக்க பாஜக நினைப்பது பகல் கனவு காண்பது போன்றது. வரும் செப்டம்பர் மாதம் முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களை சந்திக்க இருக்கிறேன். அப்போது, மக்களின் குறைகளை கேட்டு, அதை நிவர்த்தி செய்து கொடுப்பதே எனது முதல் பணி என்று பேசினார்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*