மோடியை உதாசீனப்படுத்திய மம்தா

பிரதமர் நரேந்திர மோடியை வீடியோ கான்ஃப்ரசிங்கில் சந்திக்க மேற்கு வங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தடை விதித்திருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

மத்தியில் ஆளும் பாஜக அரசு தனது பெரும்பான்மையை பயன்படுத்தி மாநில கட்சிகளை சிதைத்து கொண்டிருக்கிறது. மேலும் பல மாநிலங்களில் பல்வேறு அரசியல் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்புகின்றன. முக்கியமாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியையும் அவர் கொண்டு வரும் சர்ச்சைக்குரிய திட்டங்களையுள் கடுமையாக எதிர்த்து வருகிறார். மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மம்தா மிக தீவிரமாக எதிர்த்தார். அதேபோல மாட்டிறைச்சிக்கு தடை ஜி.எஸ்.டி போன்ற திட்டங்களையும் மிகத் தீவிரமாக எதிர்த்து வருகிறார். மேலும் பாஜகவுக்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் ஒன்றையும் அவர் தொடங்கவிருக்கிறார்.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75-ஆம் ஆண்டு விழா நடந்தது. அவ்விழாவின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் வீடியோ கான்ஃப்ரசிங் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது கோப்புகளை தாண்டி, களத்திற்கே கலெக்டர்கள் சென்று நிலவரத்தை தெரிந்துகொள்ள வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தார். ஏழைகளை எப்போதுமே நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறினார். தினமும் இரவு தூங்கச் செல்லும் முன்பு நாம் இன்று எத்தனை ஏழைகளுக்கு உதவி செய்துள்ளோம் என நினைத்து பார்த்துவிட்டு தூங்குங்கள். 2022-ஆம் ஆண்டுக்குள் உங்கள் மாவட்டங்களை எப்படி உருமாற்றி பார்க்க ஆசைப்படுகிறீர்களோ அப்படியான ஒரு ஆவணத்தை ஒரு வாரத்தில் கலெக்டர்கள் தயார் செய்ய வேண்டும் என மோடி கேட்டுக்கொண்டார்.

மாவட்ட ஆட்சியர்கள் கட்டாயமாக பீம் ஆப், எல்.இ.டி பல்புகளின் பயன்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பெரும்பாலான நேரங்களில் திட்டங்கள் தோல்வியடைவதற்கு காரணம் அவை பற்றி மக்களுக்கு போதிய விழிப்புணர்கள் இல்லாதது தான் என மோடி தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் கல்வி, குடிநீர், மின்சாரம் மற்றும் சுகாதார விஷயங்களில் அதிக கவனம் செலுத்துமாறும் மோடி கேட்டுக்கொண்டார்.

நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மோடியிடம் வீடியோ கான்ஃப்ரசிங் மூலம் பேசிய நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் மேற்கு வங்க மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மோடியை வீடியோ கான்ஃப்ரசிங் மூலம் தொடர்பு கொண்டு பேசுவதற்கு அனுமதி மறுத்துவிட்டார். இதன் மூலம் மம்தாவின் மோடிக்கு எதிரான நிலைப்பாடு தீவிரமடைந்திருப்பதை இது உணர்த்துகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*