உ.பி குழந்தை மரணங்கள்: யோகி சொல்லும் காரணம் என்ன?

உத்திர பிரதேச மருத்துவமனையில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை, குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளை பிறழ்ச்சியே முக்கிய காரணம் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து லக்னோவில் செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் ஆதித்யநாத் விளக்கமளிக்கையில். குழந்தைகள் இறப்பு விவகாரத்தை தலைமைச் செயலாளர் தலைமையிலான கமிட்டி விசாரிக்கும்.  இவ்விவகாரம் குறித்து நீதித்துறை அளிக்கும் விசாரணை அறிக்கை அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 9-ஆம் தேதி கோரக்பூர் மருத்துவக் கல்லூரி முதல்வரை சந்தித்து பேசினேன், அப்போது ஆக்ஸிஜன் தட்டுப்பாடு குறித்து
எந்தத் தகவலும் என் கவனத்திற்கு கொண்டு வரப்படவில்லை. ஆக்ஸிஜன் விநியோகஸ்தருக்குரிய தொகையை கடந்த 5-ஆம் தேதியே அரசு கொடுத்துவிட்டது. அரசின் மீது தவறா அல்லது ஆக்ஸிஜன் நிறுவனத்திற்கு உரிய நேரத்தில் தொகையை தராத கல்லூரி முதல்வர் மீது தவறா என்ற கேள்வி எழுகிறது. அதே நேரத்தில் குழந்தைகள் இறப்புக்கு ஆக்ஸிஜன் தட்டுப்பாடு காரணமில்லை, குழந்தைகளுக்கு ஏற்பட்ட மூளை பிறழ்ச்சி நோயே முக்கிய காரணம் என்று  யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்து கல்லூரியில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 62  குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் நிறுவனத்துக்கு உத்தரபிரதேச அரசு 68 லட்சம் ரூபாய் பாக்கி வைத்தால் அந்நிறுவனம் ஆக்ஸிஜன் கொடுப்பதை நிறுத்திக் கொண்டது. இதையடுத்து ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கடந்த 5 நாட்களில் 63 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என கோரிக்கை வலுத்து வருகிறது.

ஆக்சிஜன் சப்ளை இல்லாததுதான் குழந்தைகளின் மரணத்துக்கு காரணம் என்று சர்ச்சைகள் எழுந்ததும், உடனடியா 21 லட்சத்தைக் கட்டி நேற்று இரவு ஆக்ஸிஜன் சப்ளையை பெற்றிருக்கின்றனர்.

இதுகுறித்து, பாபா ராகவ் தாஸ் மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் புஷ்பா நிறுவன உரிமையாளர் தீபங்கர் ஷர்மா, “பொதுவாக எங்கள் நிறுவனத்தில் 10 லட்சத்துக்கு அதிகமாக கடன்தொகை சென்றாலே சப்ளையை நிறுத்திவிடுவோம். ஆனால் இந்த நிறுவனத்துக்கு 68 லட்ச ரூபாய்க்கு ஆக்ஸிஜன் சப்ளை செய்திருக்கிறோம். இந்த கடன்தொகையால் நாங்கள் ஆக்ஸிஜன் சப்ளை பெறுகின்ற நிறுவனம் எங்களுக்கு வழங்குவதை நிறுத்தும் சூழல் ஏற்பட்டது. அதனால்தான் பாபா மருத்துவமனைக்கு ஆகஸ்ட் 1 முதல் ஆக்ஸிஜன் சப்ளை செய்வதை நிறுத்தினோம். தற்போது அவர்கள் 21 லட்சம் செலுத்தி ஆக்ஸிஜன் சப்ளையை பெற்றிருக்கிறார்கள். நேற்று இரவே ஆக்ஸிஜன் சப்ளை அனுப்பப்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

இதில் நாம் கவனிக்க வேண்டியது, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டது அந்த மருத்துவமனை நிர்வாகத்துக்கு தெரியும். அந்த மருத்துவமனையின் ஆக்ஸிஜன் சப்ளை துறையில் இருக்கும் பணியாளர்கள், இதுகுறித்து ஆகஸ்ட் 3-ஆம் தேதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அதன்பிறகு ஆகஸ்ட் 9-ஆம் தேதி யோகி ஆதித்யநாத் மருத்துவமனையை ஆய்வு செய்ய
வந்திருக்கிறார். அப்போதும் ஆக்ஸிஜன் சப்ளையில் பற்றாக்குறை இருந்திருக்கிறது, அதுபற்றி நிர்வாகம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. யோகி ஆதித்யநாத் ஆய்வுக்கு வந்து சென்ற அடுத்த நாள் (ஆகஸ்ட் 10) அன்றும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை பற்றி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக குழந்தைகளின் மரணம் அதிகரித்து, பிரச்சனை பெரிதான சமயத்தில் வேகமாக பணத்தை செலுத்தி ஆக்ஸிஜன் சப்ளையை பெற்றிருக்கிறது பாபா மருத்துவமனை நிர்வாகம். யோகி ஆதித்யநாத் மருத்துவமனையை சரியாக ஆய்வு செய்யவில்லை என்பதே உண்மை, அதை மாற்றியமைக்க மூளை பிறழ்ச்சியை முக்கிய காரணமாக கூறுகின்றனர். பாபா ராகவ் மருத்துவமனை போதிய மருத்துவ வசதி இல்லாமல் இயங்கி வந்திருக்கிறது. மக்களுக்கு அந்தப் பகுதியில் வேறு மருத்துவமனை ஏதும் இல்லை, தனியார் மருத்துவமனையில் அதிக பணம் வசூல் செய்வதால், இந்த மருத்துவமனையை நாடி வரவேண்டிய சூழல் அமைந்திருக்கிறது. ஆனால் இதுபற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருந்திருக்கிறது உ.பி அரசாங்கம்.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*