பேரன்பின் ஆதி ஊற்று உறைந்த தினம் – விக்ரம்

திருஷ்டி கழிந்தது என்றார்கள்
தீர்க்காயுசு என்றார்கள்
படபடத்தோம் என்றார்கள்
எப்போதோ எழுதிய
என் கவிதையைச் சொன்னேன்..
“இறந்துபோனதை
அறிந்த பிறகுதான்
இறக்க வேண்டும் நான்

-நா.முத்துக்குமார்

நா.முத்துக்குமார். தனது கவிதைகளாலும், பாடல்களாலும், உரைநடையாலும் தமிழக கவிதை உலகை 18 வருடங்களாக தனது பேனா கோல் கொண்டு ஆட்சி செய்தவர். முத்துக்குமார் என்றதும் அனைவருக்கும் அவர் ஒரு திரைப்பட பாடலாசிரியர் என்பதுதான் கவனத்தில் வரும். ஆனால் அவர் ஒரு சிறந்த பாடலாசிரியர் என்பதைவிட அவர் ஒரு மிகச் சிறந்த கவிஞர். கவிதையில் மிகவும் கடினமானது எளிமையாக போகிற போக்கில் ஒரு ஆழமான கருத்தையும், அதிகமான மனிதத்தையும், அமைதியான எளிமையையும் சொல்லி செல்வது. முத்துக்குமார் இதில் மிக மிக கைதேர்ந்தவர். அவரது அனைத்து கவிதைகளும் அகங்காரம் இல்லாமல், மொழியின் அலங்காரம் இல்லாமல் தன்னை முழுதாகவும், எளிமையாகவும் வாசகனிடம் ஒப்படைத்துக் கொள்ளும். அதற்கு காரணம் முத்துக்குமார் அலங்காரமற்றவர். அகங்காரமற்றவர். அவரது கண்களில் எப்போதும் ஒரு சோகம் குடி கொண்டிருக்கும். அந்த சோகம்தான் தமிழகத்துக்கு பெரும் கவிஞனை அளித்தது. உவமையை வானத்திலும், வேற்று கிரகத்திலும் தேடி கொண்டிருந்த கொண்டிருக்கும் கவிஞர்களுக்கு மத்தியில் உவமையை வாழ்க்கையிலிருந்தும் மனிதர்களிடமுமிருந்தும் எடுத்து எளிமையாய் கையாண்டவர் கவிஞர் முத்துக்குமார். அவரது ஒவ்வொரு கவிதையும் ஒரு நூறு உணர்ச்சிகளை அளிக்கக் கூடியவை. ஒரு கவிஞன் என்பவன் தனது படைப்பை வாசகனிடம் பரிமாறும்போது ஒரு சுவையாக அளித்தலைவிட பல சுவையாக அளிப்பது பல்வேறு சிக்கல்களுக்குட்பட்டது. அது சிறிது பிசகினாலும் அந்த கவிஞன் இரட்டை அர்த்த கவிஞன் என்று இந்த சமுதாயத்தால் முத்திரை குத்தப்படுவார். ஆனால் முத்துக்குமாரை இந்த சமூகம் அப்படி பேசவில்லை, பேச இயலவில்லை. ஏனெனில் முத்துக்குமாரின் ஒவ்வொரு வரியிலும் இரட்டை அர்த்தம் இருந்தாலும் அது நல்வழிப்படுத்தும். அவரது காதல் பாடலில் காமம் இருக்கும் ஆனால் காதல் அதிகமாய் இருக்கும், அவருக்கு சமுதாய கோபம் இருக்கும் ஆனால் அந்த கோபத்தில் எதார்த்தம் மீறாத சாமானிய எதிர்பார்ப்பு இருக்கும், அவரது எதிர்பார்ப்புகளில் தன்னலம் இல்லாத ஒரு பொதுநலம் இருக்கும். அவரது எக்கச்சக்கமான கவிதைகள் இந்த பாடத்தை சொல்லி நகரும். அவர் தனது முதல் கவிதை தொகுப்பான தூசிகள் வெளியிடும் போது அவருக்கு 16 வயது.

 

கவிஞர் முத்துக்குமார் பற்றிய நினைவுக் கட்டுரை இதையும் க்ளிக்  வாசிங்க

 

 

பெண்கள் வலிகளை ஆண்களால் அனுமானிக்க முடியுமே தவிர நிச்சயம் அனுபவிக்க முடியாது ஆனால் முத்துக்குமார் என்பவர் மட்டும் இதில் விதிவிலக்கு அவர் தூர் என்ற தலைப்பில் ஒரு கவிதையை எழுதியிருப்பார்,

வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக் கிணற்றில்
தூர் வாரும் உற்சவம்
வருடத்திற்கொருமுறை
விசேஷமாய நடக்கும்
ஆழ்நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்
கொட்டாங்கச்சி, கோலி, கரண்டி
கட்டையோடு உள் விழுந்த
துருப்பிடித்த ராட்டினம்
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்
சேற்றிற்குள் கிளறி
எடுப்போம் நிறையவே
சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?
பகை வென்ற வீரனாய்
தலைநிர் சொட்டச் சொட்ட
அப்பா மேல் வருவார்
இன்றுவரை அம்மா
கதவுகளின் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்
கடைசிவரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூரெடுக்க…..

இந்த கவிதையை எழுதிய பிறகு நா.முத்துக்குமார் தூர் முத்துக்குமார் என்ற அளவுக்கு பிரபலம் ஆனார். இந்த கவிதையின் மிக விசேஷம், ஆணால் அனுமானிக்க மட்டும் முடிய பெண்களின் மன வலியை முத்துக்குமார் தனது தாயையும் தந்தையையும் உருவகப்படுத்தி வெளிப்படுத்தியிருப்பார். மிக முக்கியமாக இந்த கவிதையில் முத்து ஒரு வரி எழுதியிருக்கிறார், வேலைக்காரி திருடியதாய் சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர், இதற்கு மேலும் ஒருவர் போகிற போக்கில், ஒரு வீட்டில் வேலை செய்யும் பெண்ணை, ஆதிக்க எண்ணமுள்ளவர்கள் எப்படி மதிப்பார்கள் என்று காட்சிப்படுத்த முடியுமா என்ன? அப்பா அனைத்தையும் கிணற்றிலிருந்து தூர் எடுத்தார். ஆனால் அம்மா கடைசி வரை கதவுக்கு பின்னே ஒளிந்து அப்பாவிடம் பேசிக் கொண்டிருக்கிறாள். தனது வீட்டின் பின் உள்ள கிணறுதான் நீ, உனக்குள் நான்தான் நுழைவேன், நீ வீட்டின் முன் வந்து விடக்கூடாது என்ற ஆணாதிக்க மனப்பான்மையை முத்து தனது அப்பாவையும், அம்மாவையும் உவமைப்படுத்தி பேசியிருக்கிறார் இதற்கு எவ்வளவு பெரிய தைரியம் இருந்திருக்க வேண்டும் ஏனெனில் முத்து தனது சிறிய வயதிலேயே அம்மாவை இழந்தவர். பொதுவாக கவிதை எழுதுபவரின் உவமை தன் வீட்டு வாசலைத் தாண்டித்தான் இருக்கும். ஆனால் முத்துக்கு மட்டும்தான் தனது வீட்டுக்குள் இருந்தது. பொதுவாக ஒரு வழக்கு உண்டு, நீ உன்னை திருத்திக் கொள் இந்த சமுதாயம் தானாக திருந்தி கொள்ளும், அதன்படி முத்துக்குமார் தன்னில் தூர் எடுக்க ஆரம்பித்து, தனது வீட்டில் தூர் எடுக்க ஆரம்பித்த பிறகே அவர் சமுதாயத்தை தூர் எடுக்க ஆரம்பித்தார்.

ஒரு கவிஞன் என்பவன் எதில் பிறக்கிறான் ? எதனால் நிலைக்கிறான் ? நிச்சயம் அது காதல்தான் என்பது உலக விதி. காதலை பாடுவது வேறு காதலை காதலாய் திகட்டாமல் பாடுவது வேறு , இதனை இந்த கவிதையில் சொல்கிறார்,

காதலித்து கெட்டு போ.
அதிகம் பேசு
ஆதி ஆப்பிள் தேடு
மூளை கழற்றி வை
முட்டாளாய் பிறப்பெடு
கடிகாரம் உடை
காத்திருந்து காண்
நாய்க்குட்டி கொஞ்சு
நண்பனாலும் நகர்ந்து செல்
கடிதமெழுத கற்றுக்கொள்
வித,விதமாய் பொய் சொல்
விழி ஆற்றில் விழு
பூப்பறித்து கொடு
மேகமென கலை
மோகம் வளர்த்து மித
மதி கெட்டு மாய்
கவிதைகள் கிறுக்கு
கால்கொலுசில் இசை உணர்
தாடி வளர்த்து தவி
எடை குறைந்து சிதை
உளறல் வரும் குடி
ஊர் எதிர்த்தால் உதை
ஆராய்ந்து அழிந்து போ
மெல்ல செத்து மீண்டு வா
திகட்ட,திகட்ட காதலி….

இந்த கவிதையின் ஆரம்பித்திலேயே அவர் மிக தெளிவாக சொல்லிவிட்டார் காதலித்து கெட்டுப் போ ஆதி ஆப்பிள் தேடு என்று. ஆம் காதலித்தல் கெடுதல் என்ற எண்ணம் மேலோங்கி இருந்த காலத்தில் இந்த கவிதையை எழுதியிருக்கிறார். குறிப்பாக காதலின் உணர்வு, காதலின் வலி, காதலி பிரிந்தால் வரும் குடி, குடியால் வரும் அவப்பெயர், அவப்பெயரால் வரும் கோபம், அவப்பெயருக்கு பிறகு பிறக்கும் புது உயிர் என்று இந்த கவிதையில் காதலின் அத்தனை காலத்தையும் உணர்த்தியிருப்பார். இதுதான் முத்துக்குமார் ஏனெனில் அவர் எந்த காலத்திலும் காதலை விட்டுக்கொடுக்காதவர்.

மனிதர்கள் எழுதும் கவிதை வேறு, மனிதம் எழுதும் கவிஞன் வேறு. இதில் முத்துக்குமார் இரண்டாம் வகையை சேர்ந்தவர். வீடு மாற்றுதல் பற்றிய கவிதையில் இப்படி முடித்திருப்பார், சோறு தேடி வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை. அக்கா, தம்பி போன்ற உறவுகள் பற்றிய கவிதைகள் அவருக்கு கைவந்த கலை ஏனெனில் அவர் உறவுகளுக்கு ஏங்கியவர். அவரது அக்கா பற்றிய கவிதை படித்தால் அக்கா இல்லாதவர்கள் அக்கா ஏங்குவார்கள். அவரது தம்பி பற்றிய கவிதை படித்தால் அக்காவும் அண்ணனும் ஏங்குவார்கள். ஏங்க வைப்பதில் முத்துக்குமார் ஒரு ஊற்று.

அனைத்து கவிஞர்களும் தொட தயங்கும், தொட்டால் பிறழ்ந்து தலை திரும்பி வேறு அர்த்தம் ஆகிவிடுமோ என தயங்கி தயங்கி தொடுவது ஆண் – பெண் உறவை. இந்த சிக்கலான உறவில் மிக மெலிதாக வெட்கம் நிலைத்திருக்கும். அந்த மெல்லிய வெட்கத்தை எளிமையாக விரசமில்லாமல் வாசகர்களுக்கு விருந்து வைத்தவர் முத்துக்குமார். மிக முக்கியமாக இந்த சமூக கவிஞர்கள் பெண்களின் வெட்கத்தை எழுதி மை தீர்த்துவிட்டார்கள். ஆனால் முத்துவின் பேனா மை ஆணின் வெட்கத்தை எழுதியது.

வெட்கம் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்,

உள்ளாடைக் கடைகளில்
அளவு குறித்தான
பணிப்பெண்ணின் கேள்விக்கு
தலை குனிகிற
ஆணின் செயலுக்கு
வெட்கம் என்று பெயர்…..

ஆம் முத்துக்குமாரால் பெண்ணியம் பேச முடியும், பெண் வெட்கம் பேச முடியும், ஆண் வெட்கமும் பேச முடியும்…

நா.முத்துக்குமார் இந்த சமுதாயத்தில் அறம் சார்ந்து எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வாழ்ந்த கவிஞன். அவரது பாடல்கள் இரண்டு தேசிய விருதுகள் வாங்கினாலும் அவருக்கு வெயில் திரைப்படத்திற்கே முதல் தேசிய விருது வழங்கியிருக்க வேண்டும். அவரது ஆகச் சிறந்த தன்மை என்பது அத்தனை விதத்திலும் வித விதமான எளிமையை மிக எளிமையாக கையாண்டிருப்பார். அவரை பேரன்பின் ஆதி ஊற்று என்று சொல்வதை விட அவர் ஒரு பார் எளிமையின் ஆதி ஊற்று என சொல்வது சரியாக இருக்கும். அவரது நடை எப்படி தடுமாறாதோ அப்படித்தான் அவரது மொழியும் அவரது முகம் எப்படி அலங்காரம் போடாதோ அப்படித்தான் அவரது எழுத்தும். அவர் இருந்திருந்தால் மிகச் சிறந்த தமிழ் மிக எளிமையாக இன்னும் மாறியிருக்கும். ஆம் இலக்கண தமிழை இலகு தமிழாய் சாமானியனின் காதுகளில் கொண்டு சேர்த்தவர் முத்துக்குமார். அவரது கண்களில் ஒரு சோகம் குடி கொண்டிருந்தது அவரது சோகத்துக்குள் இருந்த கதையை மிகச் சிலரை தவிர அவர் யாரிடமும் சொல்லவில்லை. இந்த தமிழ் சமூகம் பல வருடங்களாக குடியால் சூழப்பட்டிருக்கிறது. கண்ணதாசன் குடியால் படுத்தார் என்று கூறிய சமூகம் தற்போது முத்துக்குமாரையும் அப்படி கூறிக்கொண்டிருக்கிறது. எட்டு மாத குழந்தையை பெற்றெடுத்தவர் தனக்கு வாய்த்த நோயை தெரிந்து கொண்டும் மது அருந்தியிருக்கமாட்டார். ஏனெனில் எந்தவொரு கவிஞனுக்குள்ளும் ஒரு சுயநல மனிதன் இருக்கிறான். ஆம் முத்து சுயநலக்காரன். சிலரின் பார்வையில் அவர் ஒரு அழுக்குதான் ஆனால் தமிழ் மீனுக்கு தன்னை உணவாய் அளித்த பொதுநலக்காரன். அந்த பொது நலக்காரன் இறந்து இன்றோடு ஒரு ஆண்டு நிறைவடைகிறது. நாம் பார்க்கும் நடைபாதை விளக்கிலும், நாம் கொஞ்சும் நாய்க் குட்டியிலும், நாம் கெஞ்சும் காதலியிடமும் இப்படி நாம் இருக்கும் வரை நா.முத்துக்குமார் நிச்சயம் இருப்பார். அந்த பேரன்பின் ஆதி ஊற்றுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம். அவருக்கு தமிழ் மொழி வருடா வருடம் தவறாமல் அஞ்சலி செலுத்தும் என்பது மட்டும் உண்மை.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*