’ஜெ’ மரணம் நீதி விசாரணை : முதல்வரின் அறிக்கை சொல்வது என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

[குழந்தைகள் மரணம்: எண்ணிக்கை குறைவு என்கிறார் மத்திய விசாரணைக் குழு மருத்துவர்]

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஜெ.ஜெயலலிதா உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த வருடம் டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து அவர் உயிரிழந்தது வரை மர்மம் நீடிப்பதாக பல்வேறு தரப்பினரால் கூறப்பட்டு வந்தது.முக்கியமாக தனது பதவி பறிபோனதும் அதிமுகவை இரண்டாக உடைத்த ஓ.பன்னீர் செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து கூறிவருகிறார். மேலும் இரண்டு அணிகளும் இணைய வேண்டுமெனில்  ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டுமென்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஆனால் அதனை எடப்பாடி அணியினர் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்து அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைய வேண்டுமென்று பாஜக விரும்புவதாகவும் அதற்கான துரிதமான நடவடிக்கைகளில் இரண்டு அணிகளும் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், பன்னீர் செல்வம் அணியினர் நீண்ட காலமாக கோரி வரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி இசைந்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று தலைமை செயலகத்தில்  அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா வாழ்ந்த வீடான போயஸ் கார்டன் வேதா இல்லம் நினைவிடமாக்கப்பட்டு பொது மக்களின் பார்வைக்காக திறக்கப்படுமென்றும், ஜெயலலிதாவின் மரணம் குறித்து, ஓய்வு பெற்ற  நீதிபதி தலைமையில் நீதி விசாரணை ஆணையம் அமைக்கப்படுமென்றும், ஏராளமானோரின் கருத்துக்களை பரிசீலித்து அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறினார்.

[#BlueWhaleSuicideGame மூலமாகத்தான் எனது மகன் இறந்தான் – ஒரு பெண்ணின் கண்ணீர் #Video]

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஓபிஎஸ் அணியை சேர்ந்த கே.பி.முனுசாமி, நாங்கள் கேட்டது சிபிஐ விசாரணைதான் என்று கூறியிருக்கிறார். மேலும் பழனிசாமியின் இந்த அறிவிப்பு ஒரு காலம் கடந்த நிகழ்வு என்று பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர். முக்கியமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவோ சந்தேகம் இருப்பதாகவோ ஒரு வரிகூட இடம்பெறவில்லை. மாறாக அவரது மரணம் குறித்து ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணம் இருக்கின்றன என்று குறிப்பிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதனால் பழனிசாமி அறிவித்திருக்கும் இந்த விசாரணை கமிஷன் நடவடிக்கை உண்மையில் அவரது

 

மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிப்பதற்கா இல்லை அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.  மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளி ஆவார். அவர் உயிரிழந்திருப்பதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லையேயொழிய அவர் குற்றத்திலிருந்து விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் மேலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய டிடிவி தினகரன் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்பட வேண்டுமென்று கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பால் தமிழக அரசியலில் இனி என்னென்ன மாற்றங்கள் நிகழவிருக்கின்றன என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

[அதிமுக : ”அ”னைத்திலும் ”தி”ல்லு ”மு”ல்லு ”க”ழகம்!]

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*