தலித்துகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்!

இந்தியாவிலேயே வேறுபட்ட சூழல் தமிழகத்தில் நிலவுகிறது. தேசிய இயக்கங்களுக்கு விடை கொடுத்து திராவிட இயக்கம் இங்கு ஆட்சியைப் பிடித்து 40 ஆண்டுகளைக் கடந்து விட்டது.  நேரடியாக பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு அதிகாரங்கங்களைப் பகிர்ந்தளித்த திராவிட இயக்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கையால் தாழ்த்தப்பட்ட மக்களும் பிற மாநிலங்களோடு ஒப்பிடும் போது பயன் அடைந்துள்ளனர். வளர்ச்சியும் அடைந்துள்ளனர். அது இப்போது மிகப்பெரும் சவாலைச் சந்தித்துள்ள நிலையில், அரசியல் தளத்தில் சாதி வெறி சமூகத்தை அரித்து தின்று கொண்டிருக்கிறது.

[‘ஜெ’ உடலை வைத்து அரசியல் செய்கிறதா அதிமுக!]

பிற்படுத்தப்பட்ட உயர்சாதிகள் தலித் மக்களுக்கு அரசியல் சாசனம் வழங்கும் உரிமைகளை  மறுப்பதும் அவர்கள் கால ஓட்டத்தில் முன்னேறி வருவதை பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமையால் அவர்கள் மீது வன்முறைகளையும் ஏவி வருகின்றனர்.

கடந்த சில வருடங்களில் குறிப்பாக மத்திய அரசின் ஆட்சி மாற்றத்திற்கு பின்பு ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான வன்முறைகளும் குற்றங்களும் நாடு முழுவதும் அதிகரித்துள்ளது.

2014 ஆம் ஆண்டிலிருந்து நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி தலித்துகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகளில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தலித்துகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளில்  இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகளில் குறைந்தபட்சம் ஆறில் ஒரு வழக்காவது தமிழகம் (அல்லது புதுச்சேரியிலிருந்து பதியப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இந்திய தேசிய ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் கடந்த வெள்ளிக்கிழமையன்று மறு ஆய்வுக் கூட்டம் முடிந்தபின் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுவரை தலித் மீதான வன்முறை சம்மந்தமாக பதிவாகியுள்ள 32000 வழக்குகளில் கிட்டத்தட்ட 5300 வழக்குகள் தமிழகத்திலிருந்து பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அவற்றில் சுமார் 2,000 வழக்குகள் படுகொலை, கற்பழிப்பு, உடல் ரீதியான மற்றும் வாய்மொழி தாக்குதல்கள் என கடுமையான தன்மை கொண்டவை. மீதி வழக்குகள் பணி நியமனங்கள் மற்றும் பதவி உயர்வு, இனவாத இட ஒதுக்கீடு விதிமுறைகள் சார்ந்த பிரச்சனைகளாகும். கடந்த ஏழு மாதங்களாக உயர் அதிகாரிகள் இல்லாத காரணத்தினால் தலித்துகளுக்கான இந்திய தேசிய ஆணையம் இதுவரை செயல்படாமல் இருந்தது. தற்போது காலியிடங்களில் புதிதாக பணியமர்த்தப்பட்ட அதிகாரிகள் வந்த பின்பு வழக்குகள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றது. கடந்த நான்கு வாரங்களில் மட்டும் 400 க்கும் அதிகமான வழக்குகள் விசாரிக்கப்பட்டுள்ளது. அதில் பல வழக்குகளில் எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது.

[‘ஜெ’ உடல் தோண்டி எடுத்து மறு பிரேதப்பரிசோதனைக்குள்ளாக்கப்படுமா?]

இதையடுத்து தலித்துகளுக்கான இந்திய தேசிய ஆணையம் மாநில உயர் கல்வி துறை அதிகாரிகள் மூலம் தமிழகத்திலுள்ள பல தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களில் விசாரித்ததில், பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தலித்துகளுக்கான 18% இடங்கள் ஒதுக்கப்படாதது தெரியவந்துள்ளது. இதையடுத்து தனது தவறை ஒப்புக்கொண்டு அதற்கேற்ப மாற்றம் செய்வதாக அவினாசிலிங்கம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன. மேலும் தமிழகத்திலுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கான அரசு விடுதிகள் பலவும் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது அவற்றை சீர் செய்யுமாறு அது சம்மந்தமான அறிவிப்புகள் சம்மந்தப்பட்ட எட்டு மாவட்ட கலெக்டர்களுக்கும் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட நல்லம்மாள்புரத்தில் உள்ள ஒரு ஹாஸ்டலை சீரமைப்பதற்கு ரூ .3.25 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மற்றொரு என்.சி.எஸ்.சி. உறுப்பினர் எஸ். செல்வகுமார் கூறியள்ளதாவது, “பிரிட்டிஷ் ஆட்சியின் போது தமிழகத்திலுள்ள தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்களை மீட்டுத் தரக்கோரி வந்த பல்வேறு வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டது. பஞ்சமி நிலங்களாக அறியப்பட்ட இந்த 5,000 ஏக்கர் நிலங்கள் ஏறக்குறைய தமிழகத்திலுள்ள எட்டு மாவட்டங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதில், 600 ஏக்கர் சமீபத்திய விசாரணைகளுக்குப் பிறகு மீட்டெடுக்கப்பட்டது. மேலும் தலித்துகளுக்கான நிலுவையிலுள்ள லோன்களை வழங்குவதற்காக வங்கிகள் மற்றும் அரசு நிதி நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

இதுமட்டுமன்றி ஆதி திராவிட நலத்திட்டத்தின் பிந்தைய மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மற்றும் வெளியிடப்பட்ட நிதிகளின் மீது கவனம் வைக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வாகங்களையும் இந்த ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் 2.5 லட்சம் ரூபாய்க்கு குறைவான வருடாந்திர வருவாயைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த அனைத்து தலித் மாணவர்களுக்கும் இந்த திட்டத்தின் கீழ் பள்ளிக் கட்டணம் வசூலிக்கப்படாது. அதுமட்டுமின்றி இந்த கட்டணத்தை திருப்பிச் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

[’ஜெ’ மரணம் நீதி விசாரணை : முதல்வரின் அறிக்கை சொல்வது என்ன?]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*