பேரங்கள் முடிந்ததும் ஜெ சமாதியில் அணிகள் இணைப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணையவிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்பு குறித்து பரபரப்பாக பேசபட்டு வருகிறது. தனது பதவியை இழந்ததால் அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற நாள் முதலே ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்க வேண்டும் என பன்னீர் செல்வம் கூறி வருகிறார். ஆனால் இதனை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாத முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு அணிகளும் இணைய வேண்டுமென்று பாஜகவின் அழுத்தத்தினாலும், தினகரனுக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெருகி வரும் ஆதரவினாலும் பன்னீருடன் கூட்டு சேர முடிவு செய்தார். அதன்படி நேற்று திடீரென ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.  இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும் என்று ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். அதன்படி சென்னையில் இன்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன்  தற்போது ஆலோசனை நடத்தி வருகிறார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படிச்சிருங்க : எம்.எல்.ஏக்கள் ஸ்லீப்பர் செல்ஸாக இருக்கின்றனர் : டிடிவி தினகரன்

இதையடுத்து ஜெ சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன. காரணம் பிரிந்த இடத்திலேயே ஒன்று சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  முதலில் இன்று மாலை 7.30 மணியளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் அணிகள் இணைந்த பிறகு கட்சி தலைமை யாருக்கு என்றும், சில முக்கிய துறையின் அமைச்சர் பதவிகளை ஓபிஎஸ் தரப்பு கேட்பதாகவும் தெரிகிறது. மேலும் ஆரம்பத்தில் செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோருக்கு பதவி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது கே.பி.முனுசாமி, தனக்கும்  பதவி வேண்டுமென்று கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது. கே.பி.முனுசாமி தனக்கு தனக்கு ராஜ்யசபா எம்.பி.பதவி வேண்டும் இல்லையெனில் வாரியத் தலைவர் பதவி வேண்டுமென்று கோரிக்கை வைத்து வருவதாக கூறப்படுகிறது. நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெ மரணத்தில் நீதி விசாரணை அமைக்கப்படுமென்று கூறியதும், எங்களுக்கு தேவை சிபிஐ விசாரணைதான் என்று கே.பி.முனுசாமி கூறியிருந்தார். இதனால் அவர் மீது எடப்பாடி தரப்பு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கே.பி.முனுசாமிக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியோ வாரியத் தலைவர் பதவியோ வழங்குவதற்கு ஈபிஎஸ் தரப்பினர் மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த திரை மறைவு பேரங்கள் முடிவுக்கு வந்ததும் ஜெயலலிதா சமாதியில் இரண்டு அணிகளும் இணையவிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் கே.பி.முனுசாமிக்கு பதவி தர ஈபிஎஸ் தரப்பினர் மறுப்பது குறித்து ஓபிஎஸ் தரப்பினர் டெல்லியிடம் கருத்து கேட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*