அம்மா சமாதியில் காய்ந்த மலர்கள்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஜெயலலிதா நினைவிடத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்த்த தொண்டர்கள் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றார்கள்.

டிடிவி தினகரனின் மேலூர் பொதுக்கூட்டத்துக்கு கூடிய கூட்டத்தை கண்டு பதறிய பழனிசாமி டெல்லியின் வற்புறுத்தலாலும், தினகரன் செல்வாக்கை கட்டுப்படுத்த முடியாததாலும் பன்னீ ர் செல்வத்துடன் இணைவதற்கு முடிவெடுத்தார். அதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் பன்னீரின் கோரிக்கைகளை நிறைவேற்றும் விதமாக ஜெ மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படும் எனவும் ஜெ வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் தெரிவித்தார். இதையடுத்து அணிகள் இணைப்பு குறித்து நாளை மாலை (நேற்று) முடிவு செய்யப்படும் என்று பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து சென்னையில் நேற்று ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தனது இல்லத்தில்  தீவிர ஆலோசனை நடத்தினார். இதே போல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து இரு அணிகளும் இணையப்போவதாகவும் பிரிந்த இடத்திலேயே மீண்டும் சேரப்போவதாகவும் எனக் கூறி ஜெயலலிதா சமாதி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஓபிஎஸ்ஸூம், ஈபிஎஸ்ஸூம் மெரீனா வந்து மீண்டும் இணைவார்கள் என்று வெளியான தகவலையடுத்து இரு அணிகளின் தொண்டர்களும் மெரீனாவில் குவிந்து கிடந்தனர்.

இந்நிலையில், இரண்டு அணிகளும் நேற்றே இணைந்துவிடுமென்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சில பேரங்களால் இணைப்பு நடவடிக்கை தாமதப்படிருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவியும் செம்மலை மற்றும் மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்படுவதாக இருந்தது. ஆனால் ஏற்கனவே முதல்வராக இருந்து முதல்வர் பதவி பறிபோனதால் கட்சியை உடைத்த பன்னீர் செல்வம் தற்போது கிடைக்கவிருக்கும் துணை முதல்வர் பதவியை விரும்பவில்லையென்றும் அப்படி இல்லையென்றால் கட்சியில் தலைமை பொறுப்பு தனக்கு வேண்டுமென்றும் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு எடப்பாடி தரப்பினர் மறுத்ததாக தெரிகிறது. மிக முக்கியமாக அதிமுகவின் இரண்டு அணிகள் இணைப்பை ஆரம்பத்திலிருந்தே ரசிக்காத கே.பி.முனுசாமி ஓபிஎஸ் நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் தனக்கு வாரிய தலைவர் பதவியோ அல்லது ராஜ்ய சபா எம்.பி.பதவியோ வேண்டுமென்று வலியுறுத்தியதாகவும், ஆனால் அதற்கு ஈபிஎஸ் தரப்பினர் மறுத்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும் நத்தம் விஸ்வநாதனும் தனக்கு அமைச்சர் பதவி வேண்டுமென்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. தனது ஆதரவாளர்களை ஓபிஎஸ் சமாதானப்படுத்த முடியாததால் இந்த இணைப்பு நடவடிக்கை தாமதப்பட்டிருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகின்றன.

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் வைத்து பாஜக இந்த ஒன்றுபட்ட அதிமுகவை இணைக்க திட்டமிட்டது. ஆனால் அவரவர்களின் பதவி பசியால் இந்த நடவடிக்கை தாமதப்பட்டிருக்கிறது. மேலும் ஈபிஎஸ் தரப்பினர் பதவி அளிக்க மறுப்பது குறித்து ஓபிஎஸ் தரப்பினரும், ஓபிஎஸ் அக்ரிமெண்ட் மீறுகிறார் என்று ஈபிஎஸ் தரப்பினரும் டெல்லியிடம் புகார் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பதவி பங்கீடு குறித்து டெல்லியிடமிருந்து உத்தரவு வந்த பிறகுதான் இரு அணிகளும் இணையலாம் என்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆக மொத்தம் அதிமுகவின் இரண்டு அணிகளும் நேற்றே இணையும் என தொண்டர்கள் பலத்த மழையையும் பொருட்படுத்தாமல் மெரீனாவில் காத்து கிடந்தனர். ஆனால் கடைசி வரை ஓபிஎஸ்ஸூம் ஈபிஎஸ்ஸூம் பேரங்களின் குளறுபடியால் மெரீனா வராததால் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றத்துடன் முகம் வாடி திரும்பினர். மேலும் அம்மாவின் சமாதியில் கொட்டப்பட்டிருந்த மலர்களும் வாடி போய் கிடந்தன.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*