மீண்டும் திரையுலகில் கால்பதிக்கும் #நஸ்ரியா

நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில் நஸ்ரியாவின் ரசிகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது நஸ்ரியா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் மலையாள படத்தின் திரையுலகில் கால் பாதிக்கப் போகிறாராம்.

நஸ்ரியா என்றாலே பலருக்கும் நியாபகம் வருவது அவரது குழந்தை முகமும் அதில் அவர் காட்டும் அழகான பலவித எக்ஸ்பிரஷன்களும் தான். குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் அறிமுகமாகி “நெஞ்சோடு சேர்த்து” எனும் ஆல்பத்தில் அல்போன்ஸ்புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்ததன் மூலம் தென்னிந்திய சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நஸ்ரியா. அதன் பின் 2013ல் அதே கூட்டணியுடன் இணைந்து அவர் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமான படம் ‘நேரம்’.

 

சிறு பட்ஜெட்டில் உருவான இப்படம் தமிழ் மலையாளம் என இருமொழிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் தமிழில் அவருக்கென ஒரு பெரிய ரசிகர் வட்டமே உருவானது. குறிப்பாக நேரம் படத்தில் வரக்கூடிய ‘காதல் என்னுள்ளே வந்த நேரம்’ பாடலில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு ஆண்பெண் பேதமின்றி அனைவரையும் கவர்வதாக அமைந்தது. நேரம் படத்திற்காக மட்டும் கிட்டத்தட்ட பத்து விருதுகளை பெற்றார் நஸ்ரியா.

 

அதன் பின்னர் தமிழில் அட்லீ இயக்கத்தில் அவர் நடித்த ‘ராஜா ராணி’ படமும் மாபெரும் வெற்றி பெற்றது. அதில் நயன்தாரா, ஆர்யா, ஜெய் என பல சீனியர்கள் நடித்திருந்தாலும் குறிப்பாக நஸ்ரியாவின் நடிப்பு பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. படத்தில் அவருக்கான காட்சிகள் குறைவாக இடம்பெற்றிருந்தாலும் அந்த குறைந்த நேரத்தில் ரசிகர்களின் மனதில் பெரும்தாக்கத்தினை ஏற்படுத்திச் செல்லும்படி அவரது கதாப்பாத்திரம் அமைந்தது.

 

அதன்பிறகு 2014ல் அவர் தமிழில் நடித்து வெளியான ‘வாயை மூடி பேசவும்’ மற்றும் மலையாளத்தில் அவர் நடித்த ‘ஓம் சாந்தி ஓசானா’ ஆகிய இரு படங்களும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. நேரம் படத்திற்கு பிறகு அவரது கதாப்பாத்திரத்திற்காக அதிக விருதுகளை ஓம் சாந்தி ஓசானா படம் பெற்றுத்தந்தது. தொடர்ந்து ‘பெங்களூர் டேய்ஸ்’ படத்தில் பஹத் பாசிலுடன் இணைந்து நடித்தார். அந்த சமயத்தில் இருவரும் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

 

இதையடுத்து திருமணத்திற்குப் பின் இனி படங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறிச் சென்ற நஸ்ரியா மூன்று வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தார். இதனால் நஸ்ரியாவின் ரசிகர்கள் பலரும் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் நஸ்ரியாவின் கணவர் பஹத் பாசில், “நஸ்ரியா மீண்டும் நடிக்க வருகிறார். மலையாள படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். படத்திற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து வருகின்றன” என அதிகார பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதனால் நஸ்ரியாவின் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவரது இயல்பான மனம் கவரும் நடிப்பை திரையில் காண காத்திருக்கின்றனர். இதனிடையே தமிழுக்கு அவர் மீண்டும் வரவேண்டுமென அவரது தமிழ் ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள் :

டிவிட்டரில் முதன்முதலில் தமிழ் படத்திற்கு பிரத்யேக எமோஜி – மெர்சல்

எத்தனை புது போட்டியாளர்கள் வந்தாலும் ஓவியா ஆர்மி கலையாது

பாவனா வழக்கில் ரம்யா நம்பீசனிடம் தீவிர விசாரணை!!

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*