இணைப்பு நாடகங்கள் இறுதி வடிவம் பெற்றன!

அதிமுகவின் இரண்டு அணிகளும் இணைந்ததையடுத்து புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் கடந்த 18-ஆம் தேதி ஜெ சமாதியில் இணைவதாக இருந்தன. ஆனால் ஓபிஎஸ் தரப்பினரின் கடைசி நேர நிபந்தனைகளால் இணைப்பு நடவடிக்கை இழுபறியில் இருந்து வந்தது. தற்போது இரு அணிகளுக்கும் பேரம் படிந்துவிட்டதாகவும் அதன்படி ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதல்வர் பதவி மற்றும் கட்சி வழிகாட்டுதல் குழு தலைமை பொறுப்பும் வழங்கப்படுமென தெரிகிறது. மேலும் ஓபிஎஸ் அணியை சேர்ந்த மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமென்று கூறப்பட்டது..

இத பாருங்க : அதிமுக நாடகங்கள் : பஞ்சாயத்து பண்ணும் மோடி : வீடியோ

இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது. ஆனால் சசிகலாவை நீக்குவதாக அறிவித்த பிறகே தலைமை கழகம் வருவோம் என்று ஓபிஎஸ் தரப்பினர் கூறினர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் காலதாமதம் செய்து வந்தனர். இதனால் இரண்டு அணிகளும் இன்று இணையுமா என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்தது. அதனைத் தொடர்ந்து அமைச்சர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ஆலோசனை நடத்தினார் இந்த ஆலோசனைக் கூட்டத்தை முடித்த பிறகு அமைச்சர்களான தங்கமணி, வேலுமணி ஆகியோர் ஓ.பன்னீர் செல்வத்தின் இல்லத்துக்கு சென்று ஆலோசனை நடத்தினர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலாவை கட்சியிலிருந்து நீக்குவது குறித்து உறுதியளித்ததாக கூறப்படுகிறது. மேலும் சசிகலாவை நீக்குவது குறித்த தீர்மான நகலை ஓ.பன்னீர் செல்வத்திடம் அவர்கள் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிச்சிருங்க : அணிகள் இணைவு : யாருக்கு என்ன பதவி?

இதனையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 6 மாதங்களுக்கு பிறகு அதிமுகவின் இரண்டு அணிகளின் இணைப்புக்காக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அவரை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர். தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கைகுலுக்கி தங்களது இணைப்பை அறிவித்தனர். இதனையடுத்து அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கப்படுவதாக அதிரடியாக அறிவிக்கப்பட்டது. மேலும் இரண்டு அணிகளும் இணைந்திருப்பதால் தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருக்கிறது. ஓ.பன்னீர் செல்வத்துக்கு துணை முதலமைச்சர் பதவியும், நிதித்துறையும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு தொல்லியல் மற்றும் தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஆலோசனை செய்வதற்காக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருக்கிறார். மேலும் புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா இன்று மாலை 4.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறுமென்று கூறப்பட்டிருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*