இந்தியாவின் முத்தலாக் முறை: அதை எதிர்த்து போராடிய 5 பெண்கள்

இஸ்லாமிய சமுதாயத்தில் பின்பற்றப்படும் முத்தலாக் முறை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என நேற்று (ஆகஸ்ட் 22) உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘தலாக்’ என்ற வார்த்தையை மூன்று முறை பயன்படுத்தி கணவன் தன் மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுவதுதான் முத்தலாக் (Triple Talaq) என்று கூறப்படுகிறது.

[இதையும் வாசிங்க: கஃபீல் கான் என்ற பெயர் உறுத்துகிறதா?]
இதுகுறித்து உச்சநீதிமன்றம், “முத்தலாக் முறை இஸ்லாமிய பெண்களின் அடிப்படை உரிமைக்கும், அரசியலமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. எனவே அதை ஏற்க முடியாது. இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு நாடாளுமன்றம் சட்டம் இயற்ற வேண்டும்” என கூறியது.

இந்தியாவில் ஏன் முத்தலாக் ஒழிக்கப்பட வேண்டும்?

இந்தியாவில் பின்பற்றப்படும் முத்தலாக் முறை இஸ்லாமியர்களின் ஷரியா சட்டத்திலோ, குரானிலோ குறிப்பிடப்படவில்லை. முத்தலாக் முறை குறித்து இஸ்லாமிய அறிஞர்கள், “கணவன் தன் மனைவிக்கு மூன்று மாதத்துக்கு ஒருமுறை மட்டுமே ‘தலாக்’ கூற முடியும். இந்த மூன்றுமாத காலமென்பது அவர்களுக்குள் மனமாற்றம் ஏற்பட்டு மீண்டும் இணைந்து வாழ்வதற்கான நேரமாக அமையும்” என்று கூறுகின்றனர். ஆனால், இந்தியாவில் ‘தலாக்’ என்ற வார்த்தையை தொடர்ந்து மூன்று முறை பயன்படுத்தி விவாகரத்து செய்துவிடுகிறார்கள். முத்தலாக் பயன்படுத்தி விவாகரத்து செய்ய நவீனத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகின்றனர். எஸ்.எம்.எஸ், போஸ்ட், மொபைல் அழைப்புகள், ஸ்கைப், வாட்சப், ஃபேஸ்புக் ஆகியவையும் முத்தலாக் வழங்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்தில் கூட முத்தலாக் வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பயன்படுத்தப்படும் முத்தலாக் முறையை எதிர்த்து போராடிய 5 பெண்களை பற்றி காண்போம்.

சாயரா பானோ


வயது: 35 , 2 குழந்தைகள் [உத்தர்காண்ட்]

கடந்த அக்டோபர் 2015-ஆம் ஆண்டு சாயராவுக்கு முத்தலாக் கூறப்பட்டிருக்கிறது. திருமணமாகி 15 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர் கணவர் முத்தலாக் கூறினார்.

 

 

 

ஆஃப்ரின் ரெஹ்மான்

வயது: 26 [ஜெய்பூர்]

2014-ஆம் ஆண்டு திருமணமான ஆஃப்ரின், வரதட்சனை கொடுமையால் கணவனை பிரிந்திருக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம், ஸ்பீடு போஸ்ட் மூலம் விவாகரத்து கோரியிருக்கிறார் இவரது கணவர்.

 

 

 

 

 

குல்ஷன் பர்வீன்

வயது: 31, 1 குழந்தை [ராம்பூர், உத்தர பிரதேசம்]

2013-ஆம் ஆண்டு திருமணமான பர்வீன், இரண்டு ஆண்டுகள் வரதட்சனை கேட்டு சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார். சித்ரவதை தாங்க முடியாமல் பெற்றோர் வீட்டுக்கு சென்ற அவருக்கு, 10 ரூபாய் பத்திரத்தில் முத்தலாக் அனுப்பப்பட்டிருக்கிறது.

 

 

 

 

இஷ்ரத் ஜஹான்

வயது: 31, 4 குழந்தைகள் [மேற்கு வங்காளம்]

திருமணமாகி 15 ஆண்டுகளான நிலையில், துபாயில் இருந்து தொலைபேசியின் மூலம் முத்தலாக் சொல்லியிருக்கிறார் இஷ்ரத்தின் கணவர்.

 

 

 

 

அதியா சாப்ரி

வயது: 30, 2 குழந்தைகள் [உத்தர பிரதேசம்]

2012-ஆம் ஆண்டு திருமணமான அதியாவிடம், 25 லட்சம் ரூபாய் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியிருக்கிறார் அவரது கணவர். இதற்கு எதிராக புகார் அளித்ததால், வெள்ளை காகிதத்தில் முத்தலாக் கொடுக்கப்பட்டுள்ளது.

 

இந்தியாவில் பெரும்பான்மையான இஸ்லாமிய ஆண்கள், வரதட்சணை கொடுக்காததை காரணம் காட்டியே ‘முத்தலாக்’ அளித்திருக்கிறார்கள்.

 

இந்த பிரச்சனை குறித்து திமுக பிரமுகர் ராஜாத்தி சல்மா, “முத்தலாக் குறித்த நீதிமன்றத்தீர்ப்பு வந்த பிறகு காலையிலிருந்து இரவு வரை ஏறக்குறைய பத்து ஊடகங்களிடம் தொலைபேசியிலும் நேரிலும் பேசினேன்..முத்தலாக் என்பது செல்லாது என்கிற தீர்ப்புதான் குரானிலும் சொல்லப்பட்டு இருக்கிறது . குரானை பின்பற்றி தலாக் சொல்லப்பட வேண்டும் என்பதைத்தான் கோர்ட்டிற்கு சென்ற பெண்களும் கேட்கிறார்கள். அதையேதான் இன்று நீதிமன்றமும் சொல்கிறது. ஒரே தவணையில் சொல்லப்படுகிற முத்தலாக் செல்லாது தான். ஆனால் இந்த பிரச்னையை நீதி மன்றம் நகர்த்தியிருக்கும் இடம் நாடாளுமன்றம். இன்று அசுர பலத்தோடு அமர்ந்திருக்கும் இந்துத்வ மதவாத அரசு என்ன விளையாட்டுகளை துவக்குமோ என்கிற கவலையை பகிர்ந்து கொண்டேன்.ஏற்கனவே மாடு சாப்பிடுகிற உரிமையை பறித்ததன் மூலம் பல உயிர்கள் பலிகொடுக்கப்பட்டு விட்டன . இனி இந்த விசயம் என்ன சூழ்ச்சிகளுக்கான களமோ தெரியவில்லை” என்று பதிவு செய்திருக்கிறார்.

நன்றி: Times Of India, India today, BBC

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*