அதிமுகவில் ஏன் வலுவிழந்தார் சசிகலா?:வாசு

ஒரே ஒரு போட்டோவை காட்டியிருந்தால் அல்லது திமிறி அடித்திருந்தால் இந்த நிலைமை ஆகி இருக்குமா, ”என்ற குரல் வந்த திசை திரும்பிப் பார்த்த போது , அதிமுக கரை வேட்டி கட்டிய ஒருவர், “பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை நீக்குவோம்” என அறிவித்துக் கொண்டிருந்தார். ஒருங்கிணைந்த அ தி மு க[ பாஜக] அணியினரின் செய்தியாளர் சந்திப்பை சுக்கு நூறாக உடைத்துக் கொண்டிருந்த செய்திச் சேனல் ஒன்றை பார்த்து தனக்குக் தானே பேசிக் கொண்டிருந்தார் அவர் . உண்மைதான், கட்சியின் கடை நிலைத் தொண்டன் எதிர்பார்த்த எதையும் செய்யாததால் வந்த கூட்டுவினைகளின் விளைவுகள்தானே சசிகலா தரப்பினரின் இன்றைய நிலைக்குக் காரணம் . மற்றபடி, சசிகலா குடும்பத்தினரின் அதிகாரத்தை எதிர்த்தெல்லாம் அதிமுக தொடங்கப்பட்ட காலம் முதல் தங்கள் மீது அதிகாரம் செலுத்தப்படுவதை, அதையே கட்சியின் பலமாக கருதும் குணமுடைய -அதிமுக- வில் யாரும் தன்னெழுச்சியாக கிளம்பி வரவில்லை. தங்கள் தலைவி அப்போலோவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கணம் தொடங்கி, றெக்கை கட்டிப் பறந்த வதந்திகளைப் புறந்தள்ள , அதிமுக தொண்டன் எதிர்ப்பார்த்தது இரண்டே விஷயங்கள்தான் , அம்மா எப்படி இருக்கிறார் ? சிகிச்சையிலிருக்கும் அவரது புகைப்படம் வெளிவருமா? என்பதுதான். இந்த இரண்டும் அவனுக்கு உறுதிபட தெரிவிக்கப்பட்டிருந்தால் , ஜெ மரணம் தொடர்பான அனைத்து வாட்ஸப் , முகநூல் வதந்திகளையும் உன்மையென்று நினைத்த அதிமுக தொண்டர்களின் வெறுப்புக்கு சசிகலா ஆளாகியிருக்கமாட்டார். ஜெ சிகிச்சையின் போது புகைப்படங்கள் , வீடியோக்கள் எதுவுமே எடுக்கப்பட்டிருக்காது என நம்புபவர்கள் யாருமில்லை. ஆனால்,கட்சியின் கட்டளைப் பீடம் அவரிடமிருந்து பறிபோகும் நிலையிலும் சசி தரப்பினர் அமைதி காப்பது, ஜெ மீது சசிகலா வைத்திருந்த அன்பையும் விசுவாசத்தையும் காட்டுவதாக இருக்கலாம். அந்த விசுவாச மௌனமே அரசியல் காய் நகர்த்தல்களில் தாங்கள் வீழ்வதற்கான மூலமாக இருக்கும் போது அவர்கள் அமைதி காப்பது ராஜ தந்திரமா அல்லது ராஜ விசுவாசமா ? .

இதை படிச்சிங்களா : ஆதரவு கோரிய தினகரன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின்

தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்க, கிடைத்த இரண்டாம் வாய்ப்பையும் சசி தரப்பினர் வீணடிப்பார்கள், இல்லை பாஜக வீணடிக்க வைக்கும் . ஜெ -வின் நிர்வாக- ஆட்சித் திறன் பற்றிய ”அதிரடி” பிம்ப கட்டமைப்பை பல அரசியல் நோக்கர்கள் விமர்சித்தே வந்திருக்கிறார்கள் . தனக்கு எதிராக ஒரு பெரும் போர்ப்படையே இருந்தாலும் , தாங்க முடியாத புற அழுத்தங்கள் இருந்தாலும், இந்த பிம்பத்தைக் காப்பதிலும், அதனை தைரியமாக கடந்து செல்வதிலும் ஜெ உறுதியாக இருந்தார். தொண்டர்களுக்கு அதிமுகவின் சர்வ பலம் பொருந்திய ”புரட்சித் தலைவி”யாகவும் , மக்களுக்கு “இரும்புப் பெண்மணி”யாகவும் , கனிவான “ அம்மா”-வாகவும் மூன்று ர்ரோல்களிலும் அவர் ஜொலித்தார், முக்கியமாக ஜெயித்தார். எந்த சமயம் எந்த ரோலில் ”தகதகக்க” வேண்டும் என்ற சமயோஜிதமும் அவருக்கு இருந்தது.  ஜெ-வின் பல முடிவுகளுக்குப் பின் சசிகலாவின் விருப்பங்கள் இருந்தாலும் , அவரது சமயோஜிதம் ? .அப்போலோவில் ஜெ சிகிச்சையில் இருந்த போது , தியாகத் தாயாக காட்சியளித்திருந்திருக்க வேண்டிய சசிகலா , யாராலும் புக முடியாத இரும்புக் கோட்டையாக அப்போலோவை மாற்றி , ஜெ வைப் பற்றிய எந்தத் தகவலும் ,மக்களுக்கும் -தொண்டர்களுக்கும் தெரியவிடாமல் பார்த்துக் கொண்டதன் மூலம், ஜெ வின் மரணத்துக்கே இவர் தான் காரணம் என்று மக்கள் நினைக்கும் அளவிற்கு ஒரு கொடூரமான மாற்றாந்தாயானார். ஜெ-வின் உடல் நிலை பற்றி அறிந்து கொண்ட கணத்தில் இருந்தே அதிமுகவை கைப்பற்றுவது, சசி தரப்பினரை வெளியேற்றுவது என்ற தெளிவான திட்டத்தோடு களத்தில் இறங்கிய பாஜக-வின் அதிகார மிரட்டல்களுக்கு , எதிர்த்து நின்று துணிச்சலோடு போராடியிருக்க வேண்டியவர் ,வளைந்து பணிந்து போனார் . பாஜக -வின் நோக்கம் என்ன என்பதை தெளிவாக அறிந்தாலும் , சசி தரப்பினர் பாஜக குட்டக் குட்டக் குனிந்தார்கள் . சசிகலா கணவர் நடராஜன் தஞ்சையில் “ காவிக் கூட்டத்தை தமிழகத்தை விட்டு விரட்டுவோம்” என முழங்கினார். ஆனால் , மறுபக்கம் பாஜக குட்டுவதற்கு லாவகமாக தலையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் என்பது தான் உண்மை .

அமைச்சர்  ஜெயக்குமார் நிலைமை தெரிய இங்க க்ளிக் பண்ணுங்க

சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு குறித்த கவலை இதன் காரணமாக இருந்தது. ஆனால், தான் வாழ தன் விசுவாசிகளையும் பலிஎடு என்றஅரசியல் அடிப்படை பாடத்தை மறந்து ,பாஜகவின் காய் நகர்த்தலுக்கு ஏதுவாக, தங்களுக்கு எதிரான சூழலை தாங்களே உருவாக்கிக் கொண்டார்கள். ஜெ மரணித்த தினத்தன்று இரவு, அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களிடம் சசி தரப்பினர் கையொப்பம் வாங்கி வைத்திருந்த தாள்களை வெங்கய்யா நாயுடு பறித்து கிழித்து எறிந்தார் என்ற தகவல்களும் பத்திரிகைகளில் அரசல் புரசலாக வந்தது . அதிமுக தொண்டர்கள் விரும்பும் “புரட்சித் தலைவி இறந்த தினத்தோடு அன்று சசிகலா திமிறி எழுந்திருந்தால் , இன்றைக்கு சசிகலா குடும்பத்தினர் கையை விட்டு கட்சியோ ஆட்சியோ சென்றிருக்காது .தமிழக அரசியல் ஆட்டத்தின் போக்கே வேறாக இருந்திருக்கும் .

ஜெ-வுடன் சசிகலா பல வருடங்கள் இருந்திருக்கலாம், அரசியல் அறிந்திருக்கலாம், ஆனால், எந்த சமயத்தில் “புரட்சித் தலைவி” அவதாரம் எடுக்க வேண்டும் , “அம்மா” ஆக வேண்டிய தருணம் எது என்பதை கணித்து செயலாற்றும் கலையை அவரிடம் சசிகலாவோ அவரது தரப்பினரோ கற்கவில்லை என்பதே எதார்த்தம். அதன் விளைவுதான் , கூவத்தூரில் இருந்து கிளம்பி இப்போது விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றனர் சசி தரப்பு ஆதரவு எம்.எல்.ஏக்கள். தங்கள் கட்சியை பாஜக அழிக்க நினைக்கிறது என்பதை அனைத்து அதிமுக தொண்டர்களும் அறிந்தே இருக்கிறார்கள் . தொலைக்காட்சி விளம்பரமொன்றில் தோனி சொல்வார் ” ஆட்டத்தின் கடைசி ஓவரை வேறொரு பந்துவீச்சாளரை கொண்டு வீசச் சொல்லி அனுபவஸ்தர்கள் சொன்னார்கள்..நான் யாரும் எதிர்பார்க்காத ஒரு பந்து வீச்சாளரை இறக்கினேன் , வெற்றி பெற்றோம்…” . தமிழக அதிமுக அரசியல் கிரிக்கெட்டின் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்க இருக்கிறது, சசிகலா தரப்பில் கேப்டன் கூல் (டிடிவி தினகரன்) களமிறக்கப்பட்டிருக்கிறார்.. ஆனால் அந்த கூல் கேப்டன் அதிமுக டீமை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவாரா என்பதுதான் எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*