திவாகரன் அறிவிப்பு எதிரொலி: தனபாலுடன் தீவிர ஆலோசனையில் பழனிசாமி

டிடிவி தினகரன் தொடர்ந்து கொடுத்து வரும் குடைச்சலையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் தனபாலுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் கட்சியிலிருந்து நீக்குவதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இணைந்து அறிவித்ததும் டிடிவி தினகரன் தனது பலத்தை காண்பிக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவரது ஆட்சிக்கும் சிக்கல் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் ஆளுநர் வித்யாசாகர் ராவிடம், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு கொடுத்திருக்கும் ஆதரவை விலக்கி கொள்வதாக கடிதம் கொடுத்தனர். மேலும் எம்.எல்.ஏக்கள் அனைவரும் புதுச்சேரி விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிச்சிருங்க : அதிமுகவில் ஏன் வலுவிழந்தார் சசிகலா?

இதற்கிடையே தினகரனுடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சசிகலாவின் சகோதரர் திவாகரன் மீண்டும் தினகரனுடன் கைகோர்த்திருக்கிறார். அவர் தினகரனுக்கு தனது ஆதரவினை அளித்திருப்பதால் தினகரனுக்கு பெரும் நம்பிக்கை வந்திருப்பதாக கூறப்படுகிறது. அதன்படிதான் தினகரன் கட்சி நிர்வாகிகளை அதிரடியாக நீக்கி வருகிறார் என்றும் கூறப்படுகிறது. தினகரனும், திவாகரனும் எப்படியாவது கட்சியை பிடித்துவிட வேண்டுமென்பதிலும், சசிகலாவை நீக்குவதாக அறிவித்த ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டுமென்பதிலும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன்படி ஆதரவு எம்.எல்.ஏக்களை வைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நீக்குவதில் அவர்கள் மிக உறுதியாக இருக்கின்றனர். அவருக்கு பதிலாக சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டுமென்று திவாகரன் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தனபால் சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர் மற்றும் கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர் என்பதால் அவரை முன்னிறுத்துவதன் மூலம் தலித் எம்.எல்.ஏக்களின் ஆதரவினை அதிகளவில் பெறலாமென்பதும், மேலும் கொங்கு மண்டலத்தில் செல்வாக்கை அதிகளவில் நிலை நிறுத்தலாம் என்பதும் திவாகரனின் திட்டமாக இருக்கலாமென்று கூறப்படுகிறது.

இதை படிச்சிங்களா : உட்கட்சி பிரச்னையை கலவரமாக மாற்ற துடிக்கும் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்

இந்நிலையில், திவாகரனின் அறிவிப்பை சற்றும் எதிர்பார்க்காத முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைத் தலைவர் தனபாலுடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். தலைமைச் செயலகத்தில் தனபாலுடன் முதல்வர் பழனிசாமி நடத்தும் அவசர ஆலோசனையில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திவாகரனின் அறிவிப்பு குறித்து ஆலோசனை செய்வதற்கும், திவாகரன் அறிவிப்பு தொடர்பாக தனபால் என்ன மனநிலையில் இருக்கிறாரென்பதை தெரிந்து கொள்வதற்காகவும் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கலாமென்று தெரிகிறது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*