திடீர் முக்கியத்துவம் பெறும் தலித் தலைவர் தனபால்!

தமிழக அரசை தாங்கிப் பிடித்திருப்பதே பல்வேறு தலித் சாதிகளைச் சார்ந்த 30 எம்.எல்.ஏக்கள்தான். சமூக தளத்தில் தலித் மக்களை எப்படி சமத்துவமாக நடத்த பொதுச் சமூகம் தயங்குகிறதோ அப்படியே அரசியலிலும் அவர்களை ஓரம் கட்டியே வைத்திருக்கிறார்கள். வழக்கமாக தேவர் சமூகத்தினர்கள் செல்வாக்குச் செலுத்தும் அதிமுகவில் தலித் பிரதிநித்துவம் 30 எம்.எல்.ஏக்கள் என கணிசமாக இருந்தது. துவக்கத்தில் இருந்து திருமாவளவன் போன்ற தலித் தலைவர்கள் தலித்துக்களுக்கு அமைச்சரவையில் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கோரிய போதும் அதை பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ, சசிகலாவோ கண்டு கொள்ளவில்லை. ஆனால் இப்போது எடப்பாடி பழனிசாமி அரசு மைனாரிட்டி அரசாகி விட்ட நிலையில் எடப்பாடி அரசை கவிழ்க்க தலித் சாதியைச் சேர்ந்த தனபாலுக்கு  முதல்வர் பதவி என்று தூண்டில் போட்டார் தினகரன். அந்த தூண்டிலில் சிக்க சில மீன்கள் தொடர்பெல்லைக்குள் வந்த உடன் விழித்துக் கொண்ட பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனபாலை தங்களின் 24 மணி நேர கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். தினகரன் தன்னை ஆதரிக்கும் 19 எம்.எல்.ஏக்களை புதுச்சேரியில் வைத்திருப்பது போல தலித் எம்.எல்.ஏக்கள் 30 பேரையும் எங்காவது தங்க வைக்கலமா என்று ஆலோசிக்கிறார்கள். இன்னொரு பக்கம் சபாநாயகர் தனபாலை வைத்தே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேருக்கும் நோட்டீசையும் அனுப்பினார்கள். ஆனால் வேடிக்கை என்ன என்றால் தனபால் கட்டுப்பாட்டில் தலித் எம்.எல்.ஏக்கள் 30 பேரும் இல்லை. அவர்களின் நான்கு பேர் தினகரன் கட்டுப்பாட்டிற்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்நிலையில், சபாநாயகர் தனபாலை சமாதனப்படுத்த அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா குடும்பத்துக்கு கொங்கு மண்டலத்தில் பெரிதாக செல்வாக்கு இல்லாமல் இருந்து வருகிறது. தலித் எம்.எல்.ஏக்களின் ஆதரவு மற்றும் கொங்கு மண்டல செல்வாக்கு என இரண்டையும் ஒருசேர பெற்றுவிடலாமென்ற என்று கணக்கிட்டு திவாகரன் தனபால் பெயரை முன்மொழிந்ததாக கூறப்படுகிறது. இதனை சற்றும் எதிர்பார்க்காத எடப்பாடி பழனிசாமி நேற்று காலை தனபாலுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையில், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் எப்படி எதிர்கொள்வது, தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் பதவிகளை பறித்தால் சட்ட சிக்கல் வருமா என்பதெல்லாம் குறித்து முதல்வர், சபாநாயகரிடம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்போது கொங்கு மண்டல ஒற்றுமையை குலைக்க தினகரனும் திவாகரனும் சதி செய்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி தனபாலிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகின்றன. மேலும் தனபாலை முதல்வராக முன்னிறுத்துவதாக கூறுவதன் மூலம், ஆட்சிக்குள் குழப்பம் ஏற்படுத்த தினகரன் தரப்பு முயல்வதாகவும், அதற்கு ஒத்துப்போக வேண்டாமென்றும் தனபாலிடம் முதல்வர் கேட்டுக்கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இதையும் படிச்சிருங்க : திவாகரன் அறிவிப்பு எதிரொலி: தனபாலுடன் தீவிர ஆலோசனையில் பழனிசாமி

மேலும், சபாநாயகர் தனபாலுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்து அவரை சமாதானப்படுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தலித் எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் 30 பேர் இருக்கின்றனர். ஏற்கனவே தினகரன் அணிக்கு மாறும் எம்.எல்.ஏக்களால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அப்செட்டில் இருக்கிறார் என்று கூறப்படுகிறது. எனவே ஆரம்பத்திலிருந்தே தலித் எம்.எல்.ஏக்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் பதவி வழங்கவில்லை என்று அதிருப்தியில் இருந்தனர் தலித் எம்.எல்.ஏக்கள். தற்போதைக்கு உள்ள சூழலில் தனபாலுக்கு பதவி வழங்குவதன் மூலம் தலித் எம்.எல்.ஏக்களின் ஆதரவினை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று முதல்வர் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனபாலை முதல்வராக முன்மொழிவதன் மூலம் தலித் எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற்றுவிடலாமென்று கருதியிருந்த தினகரன் தரப்புக்கு பழனிசாமியின் இந்த திட்டம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. தனபாலை எடப்பாடி பழனிசாமி சமாதனப்படுத்திய பிறகுதான், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று கொறடா சபாநாயகருக்கு பரிந்துரை செய்ததாகவும், அதனால்தான் பரிந்துரை செய்யப்பட்ட சிறிது நேரத்தில் எம்.எல்.ஏக்களுக்கு தனபால் நோட்டீஸ் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. தனபாலின் இந்நடவடிக்கை தினகரன் தரப்புக்கு நிச்சயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். இதனால் அடுத்தக்கட்டமாக எந்த நடவடிக்கையில் இறங்கலாம் என்று தினகரன் தரப்பினர் ஆலோசனையில் இருப்பதாக தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி அரசு, இனி வரும் காலங்களில் உத்தரபிரதேச அரசு போல் இரண்டு துணை முதல்வர்களுடன் செயல்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமென்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சசிகலாவின் தற்போதைய நிலைக்கு காரணம் என்ன தெரியுமா?

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*