வெளிப்படையாக பாஜகவை எதிர்க்கும் தினகரன் தரப்பு!

டிடிவி தினகரன் தரப்பினர் பாஜகவை தற்போது வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிமுக கட்சிக்குள்ளும், தமிழக அரசியலிலும் நிகழும் அத்தனை குழப்பங்களுக்கும் பாஜகதான் முழு காரணமென்று தமிழகத்தின் அனைத்து தரப்பினரும் கூறி வருகின்றனர். சசிகலாவின் கணவரான ம.நடராசன் ஒரு பொங்கல் விழாவில், தமிழகத்தை பாஜக காவிமயமாக்க பார்க்கிறது. அதிமுகவை உடைக்க பார்க்கிறது என்று பேசினார். அவரது அந்த பேச்சுக்கு பிறகு மன்னார்குடி பாஜகவின் கோபத்துக்குள் சிக்கியது. சசிகலாவை முதல்வராகவிடாமல் தடுத்தது, டிடிவி தினகரனை ஆதாரமே இல்லாத வழக்கில் திஹாருக்கு அனுப்பியது என சசிகலா குடும்பத்துக்கு எதிராக. பாஜக தனது ருத்ரதாண்டவத்தை சற்று பலமாகவே ஆடியது இதனால் அதிமுகவை இழந்து நிற்கிறது மன்னார்குடி குடும்பம். சசிகலா தரப்பும் பாஜகவின் அரவணைப்பை பெறுவதற்கு எவ்வளவோ முயன்று பார்த்தது. குடியரசுத் தலைவர் தேர்தலில் தனது ஆதரவு எம்.எல்.ஏக்களை ராம்நாத் கோவிந்த்க்கு ஆதரவளிக்க வைத்தார் டிடிவி தினகரன். இதன் மூலம் பாஜகவின் ஆதரவை பெற்றுவிடலாம் என்று கருதியிருந்த டிடிவி தினகரனுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. தனது வேட்பாளருக்கு சசிகலா தரப்பினர் ஆதரவளித்தும் பாஜகவின் ஆதரவு தினகரன் தரப்புக்கு வரவிடாமல் தடுத்தது ஆடிட்டர் குருமூர்த்திதான் என்று கூறப்பட்டது. தினகரனால் அடையாளப்படுத்தப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்தை ஆதரிக்கும் பாஜகவுக்கு ஏனோ தினகரனை ஆதரிக்க மனம் வரவில்லை.

இதையும் படிச்சிட்டு தொடருங்கள் : திரும்பி பார்க்க வைத்த தினகரன் : அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி

தற்போது பாஜகவின் விருப்பத்தால் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆகியோர் இணைந்துவிட்டனர். அவர்கள் இணைப்பையடுத்து சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மேலும் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரனுக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தினகரன் தரப்பை கொந்தளிப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது. நேற்று மதியம் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் குருமூர்த்தியை வெளிப்படையாக விமர்சித்தார். அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன், அதிமுகவும் பாஜகவும் நூறு சதவீதம் இணைந்துவிட்டதாகவும் அவர்கள் சொல்படிதான் இவர்கள் நடக்கிறார்கள் என்றும் வெளிப்படையாக விமர்சனம் செய்தார். தினகரன் தரப்பினரின் இந்த அதிரடி மாற்றம் அனைவருக்கும் சற்று ஆச்சரியத்தையே அளித்திருக்கிறது.

இது தெரியுமா : மோடியின் குஜராத் பற்றிய ஜெயலலிதாவின் கருத்து என்ன?

ஜெயலலிதா எனும் ஆளுமை உயிருடன் இருந்து அதிமுகவை வழிநடத்தியபோது பாஜக எனும் கட்சியின் தலையீடு அதிமுகவுக்குள் துளி அளவுகூட இருந்ததில்லை. அப்படி இருந்த கட்சிக்குள் தற்போது நிலைமை தலைகீழ். அதிமுகவின் உண்மை தொண்டர்களும், ஜெயலலிதாவின் விசுவாசிகளாக இன்னமும் இருப்பவர்களும் அதிமுகவின் தற்போதைய நிலையை சிறிதும் விரும்பவில்லை என்பதே எதார்த்தம். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் போல் பாஜகவுக்கு அடிபணிந்து அரசியல் செய்தால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் எடுபடாது என்பதை தினகரன் தரப்பினர் நன்றாகவே புரிந்து வைத்திருக்கின்றனர். மேலூரில் தினகரனுக்கு கூடிய கூட்டம் அவர்களுக்கு அதனை நன்றாக உணர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. எனவே பாஜகவை எதிர்த்து அரசியல் செய்து அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், பாஜகவை எதிர்க்கும் மக்கள் மத்தியிலும் செல்வாக்கை உயர்த்தி தொண்டர்கள் பலத்துடன் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்க்கு பாடம் கற்பிக்க தினகரன் தரப்பினர் தயார் ஆகிவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதனால்தான் தினகரன் தரப்பினர் பாஜகவினை வெளிப்படையாக எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்று விபரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். நடராசனின் ஒரு வாக்கியத்துக்கே பாஜக முழு மூச்சாக மன்னார்குடி குடும்பத்துக்கு எதிராக வேலை செய்தது. தற்போது வெளிப்படையாக பாஜகவை தினகரன் தரப்பினர் விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் தினகரன் மீது மேலும் வழக்குகள் பாயலாம் இல்லை பழைய வழக்குகள் மீண்டும் தூசி தட்டப்படலாம், அவர் ஆதரவாளர்கள் வீட்டில் ஐடி ரெய்டுகள் அரங்கேறலாம். இவைகள் அனைத்தையும் மன்னார்குடி குடும்பம் சமாளித்துவிடுமா என்பதுதான் தற்போதைக்கு மிகப்பெரிய கேள்வி என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதை படிச்சிங்களா : அதிமுகவில் தனிப்பெரும் தலைவரானார் தினகரன்

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*